உலகின் தொழில்நுட்ப வசதிகளில் சிகரம் தொட்டிருக்கும் நாடு ஜப்பான். அதனை ஒவ்வொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் போது நிரூபித்து வருகிறது ஜப்பான் நாடு. இந்நிலையில் புதிய முயற்சியாக, ஜப்பானின் ஆய்வாளர்கள் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டால் ஒளிரும் முகக் கவசங்களைக் கண்டுபிடித்து பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளனர்.
மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் தொழில்நுட்பத்தை ஜப்பானின் க்யோடோ ப்ரிஃபெக்சூயரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முகக் கவசம் கோவிட் தொற்று வைரஸ் பட்டால் ஒளிரும் வகையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முகக் கவசத்தை உருவாக்குவதற்காகப் பிரதானமாக இரு பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலானவது, ஆஸ்ட்ரிச் பறவையின் முட்டையில் இருந்து எடுக்கப்படும் நோய் எதிர்ப்பு செல்கள். மற்றொன்று, இருளில் ஒளிரும் சாயம். யசுஹிரோ சுகமோட்டோ என்ற ஆய்வாளரின் குழுவினர் இந்தப் புதிய வகையிலான தொழில்நுட்பம் மூலம் கோவிட் தொற்றைக் கண்டுபிடிக்கும் முகக் கவசத்தை உருவாக்கியுள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு முழுவதுமாக சரியாக செயல்படத் தொடங்கினால், அரசுகள் இவற்றிற்கு ஒப்புதல் அளித்த பிறகு, வரும் 2022ஆம் ஆண்டு இந்த முகக் கவசங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
ஏன் ஆஸ்ட்ரிச் பறவையின் முட்டைகள்?
ஆஸ்ட்ரிச் பறவைகளில் ஒரு சிறப்பம்சம் உண்டு. அவற்றின் உடலில் ஏதேனும் வெளியில் இருந்து தொற்று ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் நுழைந்தால், அவற்றை அழிக்கும் ஆற்றலை உடைய நோய் எதிர்ப்பு செல்கள் ஆஸ்ட்ரிச் பறவையின் உடலில் உண்டு.
இந்த முகக் கவசத்தில் சிறப்பம்சம் கொண்ட ஃபில்டர் ஒன்று பொருத்தப்பட்டிருப்பதோடு, இதன் மீது ஒளிரும் தன்மையை உருவாக்கும் சாயம் ஒன்றையும் ஆய்வாளர்கள் பொருத்தியுள்ளனர். புற ஊதாக் கதிர்களின் கீழ் இந்த முகக் கவசத்தை வைக்கும் போது, அதில் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், இந்த முகக் கசவம் முழுவதும் ஒளிரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இதனை உருவாக்கியுள்ள ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறும் போது, கோவிட் தொற்றுக்கு ஆளாகியிருந்தால், முதலில் சோதனை செய்து எச்சரிக்கை தரும் தொழில்நுட்பமாக மட்டுமே இந்த முகக் கசவம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இந்த முகக் கவசத்தைப் பயன்படுத்திய பிறகு, இது ஒளிர்ந்தால், அதனைப் பயன்படுத்தியவர் உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டு, தீவிர பாதிப்பில் இருந்தும், கொத்துக் கொத்தாகத் தொற்றைப் பரப்புவதில் இருந்தும் தங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
ஆய்வாளர் யசுஹிரோ சுகமோட்டோ ஆஸ்ட்ரிச் முட்டைகளைப் பயன்படுத்தி மென்மேலும் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கலாம் என்ற சிந்தனையை விதைத்துள்ளார். ஆஸ்ட்ரிச் பறவைகளின் முட்டைகளைப் பயன்படுத்தி, எளிதாக கோவிட் தொற்றைப் பரிசோதிக்கும் கிட்களையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது யசுஹிரோ சுகமோட்டோவின் ஆய்வுக் குழு.