இறுதி மூச்சு வரை இபிஎஸ்/ஒபிஎஸ் தலைமையில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவேன் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 


மகாகவி பாரதியாரின்  140வது பிறந்தநாளை முன்னிட்டு, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் பாரதியாரின் ஜதிபல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இந்து அரநிலையத் துறை அமைச்சர் பி. சேகர்பாபு, அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


இதில் உரையாற்றிய  மாஃபா பாண்டியராஜன், " அறநிலையத்துறைக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்களை அமைச்சர் சேகர்பாபு மீட்டுள்ளார். இது, மிகவும் பாராட்டுக்குரிய விஷயமாகும் " என்று தெரிவித்தார். 


இந்த பாராட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேளிவிக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, "திமுகவில் யார் வேண்டுமானலும் இணைந்து செயல்படலாம். மாஃபா பாண்டியராஜன் பிற்காலத்தில் எங்களுடன் செயல்படுவது குறித்து முதலமைச்சர்  முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். அதாவது,மாஃபா பாண்டியராஜனை கட்சியில் சேர்க்க திட்டமா? என்ற கேள்விக்கு, அது பற்றி திமுக தலைவர்தான் முடிவெடுப்பார் என்ற கோணத்தில் பதிலளித்திருந்தார். 


இந்த செய்தி திமுக, அதிமுக ஆதாரவாளர்களிடையே பேசும் பொருளாக உருவெடுத்தது. எமெர்ஜென்சியின் போது மு.க ஸ்டாலின் கைது குறித்து மிகவும் கீழ்த்தரமாக பதிலளித்திருந்தார்.  நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஆவடி தொகுதியில் போட்டியிட்ட மாஃபா பாண்டியராஜனை திமுக வேட்பாளரிடம் படுதோல்வியைச் சந்தித்தார்.  இதனையடுத்து, அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வுபெற்று, பிசினஸில் 100% கவனம் செலுத்தயிருப்பதாக மாஃபா பாண்டியராஜன் அறிவித்தார்.  


 






 


இந்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்திய  மாஃபா பாண்டியராஜன், "புரட்சித்தலைவியின் அன்பாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டு 12/6/13 அன்று கழகத்தில் இணைந்த நாள் முதல் இன்று வரை அதிமுகவின் விசுவாசத் தொண்டனாக பணியாற்றி வருகிறேன் ! அம்மா எனக்குத் தந்த உயர்வுகளை என்றும் மனதில் ஏந்தி இறுதி மூச்சு வரை EPS/OPS தலைமையில் கழகத்தின் வெற்றிக்கு பாடுபடுவேன் !" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  


முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் அரசியலுக்கு வரும் முன்னர் தொழில் அதிபராக வலம் வந்தவர். அவருக்கு சொந்தமாக மாஃபா என்ற தொழில்நிறுவனம் உள்ளது. இதன் காரணமாகவே, அவரை மாபா பாண்டியராஜன் என்று அழைக்கின்றனர். மாபா நிறுவனத்திற்கு சொந்தமாக நான்கு நிறுவனங்கள் உள்ளது. சி.ஐ.இ.எல். எச்.ஆர்., தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இன்டெக்ரம் டெக்னாலஜி, மாபா கல்வி மற்றும் மாபா ஸ்ட்ரேட்டஜி என்ற நான்கு நிறுவனங்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.