மாதவிடாய் குறித்து நாம் இன்றும் பேசத் தயங்குகிறோம். அதுபற்றி நிறைய விவாதிப்பதால் மட்டுமே அதைச் சுற்றியுள்ள தவறான நம்பிக்கையை உடைத்தெறிய முடியும் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியான பரீ சானிட்டரி நாப்கின்களுக்கான அறிமுக நிகழ்வில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






“மாதவிடாய் குறித்த வெளிப்படையான விவாதம்  மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்லும். இதுதான் சானிட்டரி நாப்கின் மற்றும் பெண்கள் சுகாதாரம் எல்லோருக்கும் கிடைப்பதற்கான முதல்படி. மாதவிடாய் மற்றும் உடல் சுகாதாரத்துக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காததால் பெண்களால் அவர்கள் எட்ட நினைக்கும் உயரத்தை எட்டமுடியாமலேயே போகிறது.மாதவிடாய் நம் உடலில் நடக்கும் இயற்கையான ஆரோக்கியமான மாற்றம். அதை இன்றும் தூய்மையற்றது என பல நினைக்கிறார்கள். அதுபோன்ற தவறான நம்பிக்கைகளைக் களைய விழிப்புணர்வுக்கான நிகழ்வுகளை நடத்த வேண்டும்.


 


பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை இது எப்படி பாதிக்கிறது என்பது குறித்துக் குறிப்பாகப் பேச வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒருவித சங்கடமான மனநிலையுடனே இருப்பார்கள். அவர்கள் உடலுக்கும் மனதுக்கும் அந்த நாட்களில் ஆரோக்கியம் அளிக்கும் வகையிலான பொருட்கள் சந்தையில் நிறைய விளம்பரப்படுத்தப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.