தனிமையாக இருப்பது போன்ற உணர்வுகளை களைய செக்ஸ் உதவுகின்றது. ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் செக்ஸ் ஒரு பொதுவான விஷயமாக உள்ளது. ஆனால், உடல் பாதிப்புகள் இருப்பவர்களின் செக்ஸ் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படலாம், இது குறித்த சந்தேகங்கள் இருக்கலாம். குறிப்பாக, இருதய பாதிப்பு உடையவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் முழுமையான ஈடுபாடு இருக்காது, அதிக அச்ச உணர்வு இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் இது போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் இருக்கின்றன. இருதய நோயால் பாதிக்கப்பட்டவரும், பாதிப்பில் இருந்து மீண்டவரும் முழுமையான ஈடுபாடுடன் செக்ஸ் வைத்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. 


இருதய நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனை என கருதப்படுகின்ற, வேகமாக விந்தணுக்கள் வெளியேறுவது என்பது மிகவும் சாதாரண பிரச்சனை என மருத்துவர்கள் சொல்கின்றனர். உடல் பாதிப்புகள் எதுவும் இல்லாத 40% ஆண்களிடமும் இந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். இதனால், இருதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் வருத்தப்பட வேண்டாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். 


பொதுவாக, இருதய நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். இதனால், இயல்பு வாழ்க்கைக்கு அவர் திரும்புவதற்கு சில காலம் எடுக்கலாம். இந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவரின் இணையர், ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருக்க வேண்டும். மன அழுத்தம் நீங்கி, இயல்பு நிலைக்கு திரும்பும் வரை செக்ஸில் ஈடுபட கட்டாயப்படுத்த கூடாது. இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது:


1. உரையாடல்: மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சில காலம் தேவைப்படும். இந்த சமயத்தில், ஒருவரை ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, கூட இருந்து கவனித்து கொண்ட இணையருக்கும் மன அழுத்தம் இருக்கலாம். இதனால், முதலில் பேச வேண்டும். விருப்பங்கள் குறித்தும், செக்ஸ் மேற்கொள்வது குறித்தும் மீண்டும் பேசவும். 


2. புரிதல்: ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். விருப்பம் உள்ளவரை காத்திருக்கவும். சிகிச்சைகள், உடல் பாதிப்பு ஆகியவற்றின் நினைவுகள் நீங்கும் வரை காத்திருக்கவும். இயல்பு நிலைக்கு திரும்பியதை உறுதிப்படுத்தியவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை பற்றி பேச தொடங்கவும்.


3. ஃபோர்ப்ளேவில் தொடங்கவும்: உடலுறவு மேற்கொள்ளும் முன், ஃபோர்ப்ளேவில் ஈடுபடவும். முத்தமிடுதல், அணைத்துக் கொள்ளுதல் என ஒருவரை ஒருவர் தயார்ப்படுத்திக் கொள்வதை தவிர்க்காமல் இருக்கவும். 


4. இதை தவிர்க்கவும்: இணையர்களின் யாரேனும் ஒருவர் சோர்வாக, பதட்டமாக, கோபமாக அல்லது நேர அழுத்தத்தில் இருக்கும்போது செக்ஸை தவிர்க்கவும். 


5. மருத்துவரை அணுகவும்: சில காலத்துக்கு பிறகு உடலுறவில் ஈடுபட முடியவில்லை எனில், வேறு ஏதேனும் உடல் பாதிப்புகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகவும்.