ஒரு மனிதன் அன்றாடம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையாக இருக்கிறது.


ஆனால், உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன் சாமான்யர்களுக்கு எழும் சந்தேகத்திற்கு அளவே இல்லை. 
உடற்பயிற்சியை காலையில் செய்ய வேண்டுமா இல்லை கிடைக்கும் நேரத்தில் செய்யலாமா? வீட்டிலேயே செய்யலாமா இல்லை ஜிம்மில் தான் செய்ய வேண்டுமா? சாப்பிட்டி விட்டு செய்யலாமா? இல்லை வெறு வயிற்றில் தான் செய்ய வேண்டுமா? இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.


இவற்றில் மிக முக்கியமான சந்தேகமாகக் கருதப்படுகிறது வெறும் வயிற்றில் பயிற்சி செய்யலாமா வேண்டாமா என்பதே.
என்ன சொல்கிறது ஆய்வு:


நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவின் அறிக்கையில் பல்வேறு முக்கியமான சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 


இந்த ஆய்வுக்காக மூன்று கேள்விகள் தயாரிக்கப்பட்டன.
1. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யலாமா?
2. அதனால், நாளின் பிற்பகுதியில் அதிகமாக சாப்பிடும் போக்கு உண்டாகுமா?
3. அப்படிச் செய்யும் பட்சத்தில் ஒட்டுமொத்த கொழுப்பு இழப்பு எவ்வளவு?


இதற்காக 12 ஆண்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இவர்களில் பாதி பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பாதி பேருக்கு வழங்கப்படவில்லை. இரண்டு பிரிவினரும் காலை 10 மணியளவில் ட்ரெட் மில் பயிற்சி செய்ய வைக்கப்பட்டனர். உடற்பயிற்சிக்குப் பின்னர் இரு பிரிவினருக்கும் சாக்கலேட் மில்க் ஷேக் பானம் வழங்கப்பட்டது. மதிய உணவாக பாஸ்தா அவரவர் வயிறு நிறையும் அளவுக்கு வழங்கப்பட்டது. அவர்களின் மதிய உணவின் அடிப்படையில் கொழுப்பின் அளவு கணக்கிடப்பட்டது. அதேவேளையில் காலையில் எவ்வளவு கொழுப்பு கரைக்கப்பட்டது என்பதும் கணக்கிடப்பட்டது.


ஆய்வு முடிவு:


உடற்பயிற்சி சோதனையில் கலந்து கொண்ட அனைவருமே அதனை சரியாக முடித்தனர். அனைவருக்குமே அவர்கள் உடலில் ஏற்கெனவே இருந்த சக்தி தான் காலைப் பயிற்சியை மேற்கொள்ள பயன்பட்டதே தவிர யாருக்கும் உடற்பயிற்சிக்கு முன்னதாக சாப்பிட்ட உணவிலிருந்து சக்தி கிடைக்கவில்லை.
அதேபோல், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தவர்களுக்கு 20% அதிகம் கொழுப்பு கரைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 


யாரெல்லாம் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யக் கூடாது?


55 வயதுக்கு மேற்பட்டோர் காலையில் வெறும் வயிற்றில் பயிற்சி செய்யக்கூடாது. அவர்களுக்கு குறைந்த சர்க்கரை அளவு இருந்தால் அன்று நாள் முழுவதும் தலை சுற்றல், சோம்பேறித்தனம் போன்றவை ஏற்படும்


வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:


உங்களின் உடல் நோன்பு நிலையில் இருக்கும் போது, உங்களின் தசைகளும், மூளையும் தேவையான சர்க்கரையை உடலில் ஏற்கெனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரை மற்றும் கொழுப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் கொழுப்பு கரைதலின் அளவு அதிகரித்துவிடுகிறது.


சில டிப்ஸ்:
உடற்பயிற்சிக்கு முன்னதாக நீங்கள் ஏதாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்று விரும்பினால், அரை வாழைப்பழம், ஒரு ஸ்பூன் வெண்ணெய், அல்லது அரை அவித்த முட்டை சாப்பிடலாம். உடற்பயிற்சிக்குப் பின்னர், கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் கழித்து உணவை அருந்தலாம்.