ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவாரெட்டியூரைச் சேர்ந்தவர் அருண்குமார். ‛தனக்கு தங்கமான மனைவி வேண்டும்... தன் குடும்பத்திற்கு அரணாக இருக்க வேண்டும்...’ என நீண்ட நாள் மணப்பெண் தேடலில் இருந்தவர். ‛பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்... நீ வருவாய் என,’ பாடலில் பார்த்திபன் போல, மகிழ்ச்சியோடு வருங்கால மனைவிக்கு காத்திருந்தார். இடைத்தரகர்கள் மூலம் தீவிர பெண் பார்க்கும் படலம் தொடர்ந்தது. இறுதியில் ரஞ்சனி என்ற பெண் பற்றி இடைத்தரகர்கள் கூற, ‛என் குடும்பத்திற்கு ஏற்ற குத்துவிளக்கு இது தான்...’ என அருண்குமாரும் டிக் செய்தார். எங்கே பெண் பார்க்கலாம் என பேசிய போது, ‛கோவை கோணியம்மன் கோயிலுக்கு வாருங்கள்...’ என, ரஞ்சனி கூறியுள்ளார். ‛என்னே ஒரு பக்தி... என்னே ஒரு அடக்கம்...’ என மெய்சிலிர்த்த அருண், கடந்த வாரம் ஞாயிறு அன்று குடும்ப சகிதமாக கோணியம்மன் கோயிலுக்கு புறப்பட்டார். ‛எனக்கென பிறந்தவ றெக்கை கட்டி பறந்தவ இவ தான்...’ என, உடனே முடிவு செய்த அருண் குமார், மறுநாளே திருமணத்திற்கு ஓகே சொல்ல, குருவாரெட்டியூர் கிராமத்தில் எளிமையாக நடந்து முடிந்தது அருண்குமார்-ரஞ்சனி திருமணம்.
‛குத்துவிளக்காக குலமகளாக.. நீ வந்த நேரம்...’ என மனைவியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற அருண்குமார், தன் கனவு வாழ்க்கை நிறைவேறிவிட்டதாக இனிமையாய் வாழ்க்கையை துவக்கினார். மூன்று முடிச்சு போட்டதாலோ என்னவோ... மூன்று நாட்கள் தான் அந்த இன்பம் நிலைத்தது. நான்காவது நாள் காலை விடிந்தது. காலையில் காபி கொண்டு வரும் மனைவி ரஞ்சனியை காணவில்லை. தேடாத இடமில்லை... ஓடாத தடமில்லை... காபியும் வரலே... ரஞ்சனியும் வரலே! ‛டயர்டு’ ஆகி வீட்டுக்கு வந்த அருண்குமார், பீரோவை திறந்து பார்த்த போது தான், வீட்டுக்கு வந்த குத்துவிளக்கு, வீட்டிலிருந்த குத்துவிளக்கு உள்ளிட்ட அனைத்தையும் வாரி சுருட்டி எடுத்துச் சென்றது தெரிந்தது. 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் முதற்கொண்டு அபேஸ்.
‛எங்க வீட்டு குத்துவிளக்கு ... நீ கெடச்சா வாழ்க்கை கெத்து...’ என வெறியோட ரஞ்சனியை தேடி ஆரம்பித்தார் அருண். ‛தேடினாலும் கிடைக்காது...’ என்பதைப் போல், மாயமானார் ரஞ்சனி. ‛ரஞ்சனி தன் வாழ்வின் சனி...’ என அப்போது தான் அருணுக்கு தெரிந்தது. மாமியார் வீட்டுக்குச் செல்ல வேண்டிய புதுமாப்பிள்ளை அருண்குமார், அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு சென்றார். புகார் செய்தார். சரி, இனி அனைத்தையும் காவல்துறை பார்த்துக்கொள்ளும், நாம் வேறு மனைவி பார்ப்போம் என நினைத்தது தான் தாமதம், அருண் குமார் எண்ணுக்கு ஒரு அழைப்பு.... ‛யாரு... அருண் குமாரா.... நான் தான் ரஞ்சனி புருசன் பேசுறேன்....’ என்றது அந்த குரல். ‛ஹலோ.... நான் தாங்க அவ புருசன்...’ என, கடுப்பாகியுள்ளார் அருண். ‛தம்பி... நீ இரண்டாவது... நான் தான் முதல் புருசன்....’ என, அடுத்த குண்டை போட்டுள்ளார் அந்த பக்கம் இருந்து பேசிய நபர். தனது பெயர் கிருஷ்ணன் என்றும், எனக்கு தெரியாமல் எப்படி என் மனைவியை திருமணம் செய்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். அதுவரை நிலை குலைந்திருந்த அருண்குமாருக்கு, இப்போது தலை குலைந்து போனது. போதாக்குறைக்கு, தன் மனைவியை கடத்தி திருமணம் செய்ததாக அருண்குமார் மீது பந்தயசாலை காவல்நிலையத்தில் புகார் வேறு செய்தார் கிருஷ்ணன்.
‛இடைத்தரகருக்கு ஒன்றரை லட்சம் கமிஷன் கொடுத்து, கடைந்தெடுத்து கண்டுபிடித்த மனைவி, கம்பி நீட்டியது மட்டுமல்லாமல், கம்பியும் எண்ண வைக்கப்போறாளே...’ என நொந்து கொண்டது அருண்குமார் குடும்பம். விசாரணைக்கு வந்த இடத்தில், ரஞ்சனி மீதும் இடைத்தரகர் மீதும் ஒரு புகாரை கொடுத்து விட்டு வந்திருக்கிறார் அருண்குமார். ரஞ்சனி யாருடைய மனைவி என்கிற போட்டி ஒருபுறம், மாயமான ரஞ்சனி... எங்கே நீ... என தேடுதல் மறுபுறம் என தற்போது இந்த பிரச்னை பந்தயசாலை போலீசார் தலையில் விழுந்திருக்கிறது. ‛பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்...’ நீ வருவாய் என,’ என்ற அதே பாடலின் ‛பேத்தாஸ்’ வெர்சனை தற்போது பாடிக்கொண்டிருக்கிறார் அருண்.