மாதவிடாய் பிரச்சினையை அசட்டை செய்தால் அது இதய நோய் வரை இழுத்துச் செல்லும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


மாதாமாதம் பீரியட்ஸ் வந்துவிட்டால் அது உங்கள் உடல் நலம், மன நலம் சிறப்பாக இருப்பதற்கான அறிகுறி. உடலில் சுரக்க வேண்டிய ஹார்மோன்கள் சீராக சுரக்கின்றன என அர்த்தம்.


ஒருவேளை உங்கள் மாதவிடாய் சுழற்சியில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் காலம் தள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இல்லாவிட்டால் அது இதய நோய் வரை கொண்டு செல்லும் என்றும் கூறுகின்றனர்.


PCOD-ஆ உடனே டாக்டரைப் பாருங்க..


பொதுவாக மாதவிடாய் சிக்கலுக்கு polycystic ovarian syndrome (PCOS) பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சனைதான் காரணமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக இளம் பெண்களை இப்பிரச்சினை தாக்குகிறது. இது ஒருவகையான ஹார்மோன் தொந்தரவு. பிறவிக்குறைபாடாகப் பெண்களைப் பாதிக்கிற பிரச்சனை. 14 வயது முதல் 40 வயது வரை எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிகுறிகள் தோன்றலாம். சினைப்பைகளின் செயல் திறனில் பிரச்சினை ஏற்படுவதைத்தான் `பாலிசிஸ்டிக் ஓவரிஸ்’ என்கிறோம். அதாவது சினைப்பைகளை இயங்கச்செய்கிற ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம்.


பெங்களூரு ரிச்மாண்ட் சாலையில் உள்ள ஃபோர்டிஸ் லா ஃபெம் மருத்துவமனையின் இயக்குநர் ராஜ்பால் சிங் கூறும்போது, பிசிஓஎஸ் இன்சுலின் எதிர்ப்புத்திறனாலும் உருவாகிறது. ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஹார்மோன் அதிகமாக சுரப்பதாலும் உருவாகிறது.


இது, ஒரு பெண்ணுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் எடை அதிகரித்தல், கொழுப்பு அளவில் ஏற்ற இறக்கம், சர்க்கரை வியாதி ஆகியனவற்றை ஏற்படுத்துகிறது. பெண்களில் மலட்டுத் தன்மை ஏற்படவும் இது காரணமாக இருக்கின்றது.


வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் ஏற்படும் போது இதயநோய், பக்கவாதம் போன்றவை ஏற்படுகின்றன. பிசிஓடி, பிசிஓஎஸ் என்பதும் வளர்சிதை மாற்றத்தில் பிரச்சினையை உண்டாக்குவதால் பிசிஓஎஸ் பிரச்சினையை ஆரம்பநிலையிலேயே கவனிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.


லைஃப்ஸ்டைல் எனப்படும் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும். உடற்பயிற்சி அவசியம். புகை, மது பழக்கம் இருந்தால் நிறுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவை திட்டமிட்டு உண்ண வேண்டும். அத்துடன் மருத்துவரின் பரிந்துரையோடு மெட்ஃபார்மின், ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது இதய நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்சினை, பிறப்புறுப்பு பிரச்சினை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் பிரச்சினையை வெளியில் பேசத் தயங்குகின்றனர். இதுவே பல நேரங்களில் நோய் முற்ற காரணமாக அமைந்துவிடுகிறது.