வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய 5 யோகாசனங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
உலகம் முழுக்க இன்று சர்வதேச யோகதினம் கொண்டாடப்படும் நிலையில், வீட்டிலேயே சிம்பிளாக செய்யக்கூடிய 5 யோகசானங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். நீங்கள் இப்போதுதான் புதிதாக யோகா செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் 5 யோகாசனங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், ஒன்றை மட்டும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஒரு புதிய பயிற்சியை மேற்கொள்வதாக இருந்தாலும், அதில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை அருகில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
பாலாசனம்
இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல அமர்ந்து பின்னர் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பது போல படுத்து, நெற்றி தரையில் படுப்பது போல குனியவும். அப்படியே தவழும் நிலைக்கு வந்து, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேராக கீழாகவும், உங்கள் கால் முட்டி உங்களின் இடுப்புக்கு நேர் கீழாக இருக்கும் விதமாக உள்ளங்கைகளையும் கால்களையும் தரையில் வைக்கவும்.
அதோ முக ஸ்வானாசனம்
உள்ளங்கைகளை தரையில் அழுத்தி, மூச்சை வெளியே விட்டபடி, கால் முட்டியை தரையில் இருந்து எடுத்து இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும்.
இப்பொழுது உங்கள் உடல் ஆங்கில எழுத்து ‘V’-யை திருப்பி போட்டது போல் இருக்கும்.
புஜங்காசனம்
தரை விரிப்பில் குப்புற படுத்து கொள்ளுங்கள். தொடர்ந்து மார்பின் பக்கத்தில் உள்ளங்கைகளை வைத்துக்கொள்ளுங்கள்.
பின்பு உங்கள் மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக மார்பை உயர்த்தி தொப்புள் தரையில் படாதவரை உடலை பின்னோக்கி வளையுங்கள். தொடர்ந்து பாதங்கள், கால்கள் மற்றும் இடுப்பை தரையில் அழுத்தவும்.
பந்த சர்வாங்காசனா:
தரை விரிப்பில் படுத்துக்கொள்ளும் நீங்கள், கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றி நிலையில் வைக்க வேண்டும். உள்ளங்கைகளை தரையோடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இடுப்பையும், முதுகையும் மெல்ல மேலே உயர்த்துங்கள். இடுப்பினை கைகளால் தாங்கும்படி பிடித்துக்கொள்ளுங்கள்.
வீரபத்ராசனம்
கால்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். பின் வலது காலை முன் நோக்கி சற்று பெரியதாக வைக்க வேண்டும். இடது கால் பின்னால் இருக்க வேண்டும். தொடர்ந்து இடது கால் பாதத்தை 45 டிகிரி கோணத்தில் திருப்ப வேண்டும். தொடர்ந்து வலது கால் முட்டியை முன்னோக்கி மடக்கிக்கொண்டு இரு கைகளையும் ஒன்றாக சேர்த்தவாறு தலைக்கு மேலே உயர்த்த வேண்டும். வலது கால் முழங்கால் மற்றும் கணுக்கால் ஒரு நேர் கோட்டில் இருப்பது முக்கியம்.