பெற்றோர்களுக்கான ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கான பக்கங்கள் அண்மைக்காலமாக இன்ஸ்டாகிராமில் பெருகி வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் மாயாஸ் அம்மா. இந்த பக்கத்துக்குச் சொந்தக்காரரான ஸ்வாதி ஜெகதீஷ், குழந்தை வளர்ப்பு மற்றும் பாலியல் கல்வி நிபுணர். பல பிரபலங்களுக்கு அவர்களுக்கான குழந்தை வளர்ப்பில் உதவியாகப் பணியாற்றி இருக்கிறார். 






அவர் அளித்த பேட்டியில் இருந்து, ”பாலியல் கல்வியைப் பெற்றோர் சொல்லித் தருவது சரியா எனக் கேட்கிறார்கள். அப்போ அதை பிள்ளைகள் இண்டர்நெட்டில் இருந்து கற்றுக் கொண்டால் சரியா? கடலில் இருக்கும் அத்தனைக் குப்பைகளையும் அள்ளிக்கொண்டு வருவதை விட நமக்கு எது தேவை எது தேவை இல்லை என்பதை பெற்றோரே புரியவைப்பது ஆரோக்கியமானது. அதை சொல்லித் தருவதற்கு இதுதான் வயது என்று இல்லை. குழந்தைக்கு புரியத் தொடங்குவதில் இருந்தே அவர்களுக்கு அவர்கள் பாணியில் சொல்லிப் புரிய வைக்கலாம். செக்ஸுவல் ப்ரிடேட்டர்களிடமிருந்து அவர்களை அது பாதுகாக்கும். இது போன்ற பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் எடுத்த உடன் குழந்தை இடம் நேரடியாக வன்முறையில் ஈடுபடுவதில்லை. அவர்கள் குழந்தைகளிடம் ஒருவிதமான நல்ல உறவை உருவாக்க முயலுவார்கள்.பிறகே அவர்கள் தவறான வகையில் பிள்ளைகளை அணுகத் தொடங்குவார்கள். ஒரு குழந்தை ஒரு நபரிடம் பாதுகாப்பாக உணரவில்லை என்றாலே அதை நம்மிடம் தெரியப் பழக்கப்படுத்த வேண்டும். தொடுவது மட்டுமே சிறார் பாலியல் வன்முறை இல்லை. ஆண் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதில்லை எனத் தவறாக நினைக்கிறார்கள். ஆனால் நமக்கு போக்ஸோ சட்டம் கிடைத்ததன் பின்னணியே ஆன்குழந்தைகளுக்கு பாலியல் வன்முறை நடப்பதால்தான்.” என்கிறார்.