ஒரு மனிதன் சேர்க்கும் மிகப்பெரிய செல்வம் பணமோ, வீடோ, நகையோ அல்ல. அவனது உடல்நலமே ஆகும். உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே பணம், வீடு, நகை ஆகியவற்றை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.


மலச்சிக்கல்:


மனிதன் ஆரோக்கியமாக இருப்பதற்கு இயற்கை உபாதைகள் எந்த சிரமும் இல்லாமல் வெளியேற வேண்டியது மிகமிக அவசியம். திரைப்படத்தில் வேடிக்கையாக மலச்சிக்கல் மனுஷனுக்கு பல சிக்கல் என்று கூறுவார்கள். வேடிக்கையாக அந்த வசனத்தை கூறினாலும் அந்த வார்த்தை என்பது நூற்றுக்கு நூறு உண்மையாக மாறிவிட்டது.




 இன்று நமது உடலில் நாம் எதிர்கொள்ளும் பல சிரமங்களுக்கு மலச்சிக்கல் முக்கிய காரணம் ஆகும். மலச்சிக்கல் தானே என்று அஜாக்கிரதையாக இருப்பது மூலம் வரை கொண்டு செல்லும் அபாயம் உண்டு. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முழுக்க முழுக்க காரணம் நாம்தான்.


காரணம் என்ன?


இன்று நாம் வாழ்வில் நமது உணவும், நாம் வாழும் வாழ்க்கை முறையும் எந்தளவு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கானது என்று நமக்கே தெரியும். மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது மலத்தை அடக்குவது ஆகும். நாம் ஏதோ ஒரு வேலையாக இருக்கிறோம், அலுவலக வேலையாக இருக்கிறோம், பயணத்தில் இருக்கிறோம், சில வேலைகளை முடிக்க வேண்டும் என்று இயற்கை உபாதை வரும்போது அதை அடக்கினால் அந்த மலம் இறுகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனால், அடுத்த முறை நாம் கழிவறைக்கு செல்லும்போது சிரமப்பட்டு இயற்கை உபாதை செல்ல நேரிடும்.


அதேபோல, நாம் தூங்கும் முறை மாறுவது, தூக்க சுழற்சி பாதிக்கப்படுவது, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, அதிக திடமான( அசைவ) பொருட்களை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம். இந்த மலச்சிக்கலை எளிதாக தவிர்ப்பது எப்படி?


தண்ணீர் தேவையான அளவு குடிப்பது:






உலகிற்கே ஆதாரமாக விளங்கும் தண்ணீர்தான் இந்த பிரச்சினைக்கும் முக்கிய தீர்வு ஆகும். தண்ணீர் முறையாக குடிக்காமல் இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால், தண்ணீர் நன்றாக குடிக்க வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள் சிலருக்கு அடிக்கடி தாகம் ஏற்படாமல் இருக்கலாம். ஆனாலும், தண்ணீர் தேவையான அளவு குடித்துக்கொள்வது மிகவும் நல்லது. அது மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கும்,


நீர்ச்சத்துள்ள பொருட்கள்:


மலம் சிரமமின்றி போவதற்கும், மலச்சிக்கலை தவிர்ப்பதற்கும் நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை, பழங்களை சாப்பிட வேண்டும். தர்பூசணி பழம், வெள்ளரிக்காய், கீரை வகைகள், நீர்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் உங்கள் குடலில் இருந்து கழிவுகள் எளிதில் வெளியேறவும் வழி செய்யும்.




அசைவ உணவுகளை குறைப்பது:


இன்றைய வாழ்க்கை முறையில் பலருக்கும் உடலில் ஏற்படும் சிக்கல்களுக்கு அசைவ உணவுகளே காரணமாக அமைகிறது. அதுவும் சில உணவகங்களில் ஆரோக்கியமற்ற முறையில் சமைக்கும் அசைவ உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. அசைவ உணவுகளை நாம் சாப்பிடாமல் இருக்க முடியாது. ஆனால், அதற்கு ஒரு வரையறை வைத்துக்கொள்ளுங்கள். ஓரளவிற்கு மேல் அசைவ உணவுகள் சாப்பிடும்போது அதாவது திடப்பொருட்களாக உண்ணும்போது நமக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதனால், அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது மிக மிக நல்லது.


உடற்பயிற்சி செய்வது:




இன்று நம்மில் பலர் ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால், நமது சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், நாம் தினமும் காலை மற்றும் மாலையில் உடற்பயிற்சி செய்வதற்கு போதியளவு நேரத்தை ஒதுக்கினால் நம் மலச்சிக்கல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.


மலமிளக்கி :


மலம் இலகுவாக செல்ல வைக்கும் உணவுகளையே மலமிளக்கி என்பார்கள். வாழைப்பழம் மிகச்சிறந்த மலமிளக்கி ஆகும். நாட்டு வாழைப்பழத்தை இரவு உணவு முடித்த பிறகு சாப்பிடுங்கள். ஆப்பிள், பேரிக்காய், கிவி, கொய்யாப்பழம் மற்றும் கீரை வகைகள் போன்றவை சாப்பிட்டாலும் மலம் இலகுவாக செல்லும்.