மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் மாதமாக  அனுசரிக்கப்படுகிறது.


மார்பக திசுக்களில் தோன்றும் புற்றுநோயே, மார்பக புற்றுநோய் என அறியப்படுகிறது. பால் சுரப்பி நாளங்கள் அல்லது மார்பக அடுக்குகளில் இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமானது தான் தமது  மார்பகங்களை மாதத்திற்கு ஒரு முறையேனும் பரிசோதிப்பதாகும். 


மார்பகத்தின் சுய பரிசோதனைக்குப் பிறகு, மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான சிறந்த கருவி மேமோகிராம் ஆகும் என கூறப்படுகிறது. பெண்களை பாதிக்கும் பல்வேறு வகையான புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் மிகவும் கவலைக்குரிய  ஒன்றாகும்.


சுய பரிசோதனைக்குப் பிறகு, மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழி மேமோகிராம் என்ற  ஊடுகதிர்ப்படச் சோதனை ஆகும். சில மார்பக புற்றுநோயாளிகளுக்கு ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் தென்படாது என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சிலருக்கு அதிக அளவிலான மார்பக புற்றுநோய் குறித்த அறிகுறிகள்   காணப்படுகின்றன. இதில்  சில பெண்களின் மார்பகத்தின் அளவு அல்லது வடிவத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன .
மார்பகம் அல்லது அக்குள் பகுதியில் கட்டி போன்று இருப்பது அதன் கூடுதல் அறிகுறிகளில் ஒன்றாகும்.


 மார்பகத்தில் வலி, மற்றும் முலைக்காம்பில் நீர் போன்று வெளியேறுவது , அத்துடன் இரத்தம் வெளிவருதல் என பல அறிகுறிகள் காணப்படும்.


ஆகவே மாதத்திற்கு  ஒருமுறையேனும்  மார்பகங்களை பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் உயிர் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர் .


மார்பக சுய பரிசோதனை:


ஒரு கண்ணாடியின் முன் மேலாடையின்றி ,ப்ரா ஏதும் அணியாமல் இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து, உங்கள் மார்பகங்களின் வடிவம் மற்றும் அளவுகளில் ஏதேனும் மாறுபாடுகள் உள்ளதா என்பதைக் கவனிக்கவும். 


அதேபோல் கைகளை உயர்த்தி அக்குள் பகுதியில் கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா என பரிசோதனை செய்து கொள்ளவும். இறுதியாக மார்பு தசைகளை பிடித்து பார்க்கும்போது, ​​ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதைக் கவனிக்க முயற்சி செய்யவேண்டும்.


 கைகளால் ஆய்வு செய்தல்: 


கையைப் பயன்படுத்தி உங்கள் மார்பகங்களைப் பரிசோதிக்கவும். உங்களின் முதல் மூன்று விரல்களை பயன்படுத்தி கட்டிகள் ஏதேனும் உள்ளதா என கண்டுபிடிக்க  மார்பகங்களின் மேல் லேசான அழுத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். பின்னர்  முலைக்காம்புகளை அழுத்தி, நீர் வெளியேற்றம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளவும்.


படுத்திருக்கும்போது மார்பகத்தை பரிசோதித்தல்:


உங்கள் மார்பகங்களில் உள்ள திசுக்கள் படுத்துக்கொள்ளும்போது சமமாகப் பரவியிருப்பதால் அதில் ஏதேனும் கட்டிகள் இருந்தால் கண்டுபிடிப்பது இலகுவாக இருக்கும். இரண்டு  மார்பகத்தையும் நன்கு அழுத்தி  சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .அவ்வாறு சந்தேகத்திற்கு இடமாக ஏதேனும் சிறிய கட்டிகள் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.


மார்பில் வீக்கம் அல்லது கட்டி போன்று இருந்தால் பரிசோதனை மிகவும் அவசியமாகும். ஒரு பக்கம் மார்பகம் பெரிதாக இருந்தால் உடனடியாக பரிசோதிக்க வேண்டும். ஒருவேளை பரிசோதித்து பார்க்க வேண்டிய அவசியம் இருப்பின் மருத்துவரை கலந்து ஆலோசித்து மேம்மோகிராம் எனப்படும் எக்ஸ்ரே டெஸ்ட் மற்றும் ஸ்கேன் டெஸ்ட் எடுப்பது மிகவும் அவசியமாகும். செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவை காரணமாக மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன