மாதவிடாய் என்பது பெண்களுக்கு மாதந்தோறும் 28 நாட்களுக்கு ஒரு முறை என்ற முறையில் சுழற்சி அடிப்படையில் ஏற்படுகிறது. மாதவிடாய் பற்றி 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வளவு வெளிப்படையாக இந்தியாவில் யாரும் பேசவில்லை. இப்போது மாதவிடாய் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கிறது. வீட்டிற்கு விலக்கு என்று கூறி சிறு பிள்ளைகளைக் கூட வீட்டைவிட்டு மாதவிடாய் நாட்களில் விலக்கி வைக்கும் போக்கு குறைந்துள்ளது.


ஆயினும் இன்னும் தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்போது மாதவிடாய் காலத்தில் பேண வேண்டிய ஆரோக்கிய அறிவுரைகள் பெண்களை சென்றடையும். அந்த வகையில் மாதவிடாய் காலத்தில் பெண்களின் யோனிப் பகுதியில் ஏற்படும் தொற்றுகள் பற்றி (vaginal infections) பற்றி தெரிந்து கொள்வோம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் சற்று கோபமும் எரிச்சலும் வெளிப்படுத்துவது கூட இதுபோன்ற காரணங்களால் இருக்கலாம்.


நாப்கினை மாற்றுங்கள்:
மாதவிடாய் இரத்தம் நம் உடலில் பல்வேறு கிருமிகள் உற்பத்தி ஆவதற்கு வழிவகை செய்கிறது. நமது உடலில் தங்கும் சூட்டினால் இந்த கிருமிகள் உண்டாகின்றன. பிறப்புறுப்பில் இந்தக் கிருமிகள் தோன்றுவது உடலுக்கு உபாதையை ஏற்படுத்தும். சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றுவது இந்த நோய்க்கிருமிகள் உண்டாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.


சுத்தம் செய்வதில் கவனம் தேவை:
ஆண்களைவிட பெண்களுக்கு பிறப்புறுப்பு தொற்றுக்கான வாய்ப்பு அதிகம். காரணம் பெண்களுக்கு ஆசன வாயும், யோனி வாயும் அருகருகே இருக்கிறது. இதனால் யோனியிலிருந்து ஆசனவாய் வரை கழுவ வேண்டும். எதிர்மறையாகக் கழுவுவதால் கிருமிகள் இன்னும் பிறப்புறுப்புக்குள் உள்ளே தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம். உங்கள் பிறப்புறுப்பை இவ்வாறாகக் கழுவுவதே சுத்தத்தை உறுதி செய்யும் வழி. சானிட்டரி நாப்கினை அகற்றிய பிறகு பாக்டீரியா உங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதனால் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துங்கள்.


ரசாயனப் பொருட்கள் கூடாது:
யோனியை சுத்தம் செய்ய கடினமாக ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது. ஜெண்டில் சோப் எனப்படும் மிதமான சுத்திகரிப்புப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். வெதுவெதுப்பான நீரில் கழுவுவது குளிப்பது மாதவிடாய் நேரத்தில் உகந்தது.


சரியான உபகரணத்தைத் தேர்வு செய்யவும்
பொருத்தமான மாதவிடாய் சுகாதாரப் பொருட்களைத் தேர்வு செய்யத் தவறி, எரிச்சல், தோல் சிவத்தல், அல்லது சொறி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். ஆகையால் உங்களுக்கு எந்த வகையான சானிட்டரி நாப்கின் பொருத்தமானது என்பதை அறிந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்தவும். அதிக சென்ட் வாசனை கொண்ட பேட்களை தவிர்க்கவும். மாதவிடாய் காலத்தில் பிறப்புறப்பு பகுதியில் வாசனை திரவியம் தெளிக்கவே கூடாது. சிலர் பேண்ட்டியின் மேலே தெளிப்பதுண்டு. இது பல உபாதைகளுக்கு வழி வகுக்கும். அதேபோல் உள்ளாடையை நன்றாக துவைத்து வெயில்படும் இடத்தில் காயவைத்து பயன்படுத்துவது மிக முக்கியமானது.


உணவு முறை:
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் யீஸ்ட், பூஞ்சைத் தொற்றுகளைத் தவிர்க்க மாதவிடாய் காலத்தில் அதிக எண்ணெய், காரசாரம், புளிப்பு என சுவைமிகு உணவுகளைத் தவிர்க்கலாம். எளிதில் ஜீரணமாகும் உணவுகளையும் பழங்களையும் கீரைகளையும் உலர் பழங்களையும் உட்கொள்ளலாம். புதினா இலைகள் ஒரு கையளவு, எலுமிச்சை பாதியளவு, வெள்ளரிக்காய் நறுக்கியது. அனைத்தையும் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் அதை முதல் பானமாக எடுத்து கொள்வது சிறந்தது. ஒரு நாளை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ளும்.


புரோபயாடிக் உணவு அவசியம்: லேக்டோபேசில்லஸ் என்பது ஆரோக்கியமான யோனி பராமரிப்புக்கு உதவும் பாக்டீரியாவான புரோபயாடிக்குகளின் மாற்றாகும். இவை கேண்டிடா பூஞ்சையை எதிர்த்து போராட உதவுகிறது. தோசை மற்றும் இட்லி, யோகார்ட் , ஊறுகாய், தயிர் , சீஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த புரோபயாடிக்குகள் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அவை யோனி தொற்றை தடுக்க உதவுகிறது.