கடனை கட்டாததால், நபர் ஒருவரை இரண்டு கிலோ மீட்டர் தூரம் பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த கொடூரமான சம்பவம் நிகழும் போது பொது மக்களுடன் சேர்ந்து காவல் துறையினரும் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பது மேலும் வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தள் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிசா மாநிலத்தை நவீன் பட்நாயக் முதல்வராக இருந்து வருகிறார். அண்மையில் ஒடிஷாவில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. கடனை வாங்கிய ஒருவர், சரியாக கடனை திருப்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவரை பைக்கில் கட்டி 2 கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ள கொடுமைச் சம்பவம் அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது.
ஒடிசாவின் கட்டாக் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்கு கடன் வழங்கி, அதனை வசூல் செய்து வரும் ஒரு மீடியேட்டரிடம், இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரூபாய் 10,000 ஆயிரம் வாங்கியுள்ளார். இதனை கூறியபடி சரியான முறையில் திருப்பித் தரமுடியாத நிலையில் கடன் வாங்கியவர் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து, வேறு ஒருவருடன் இணைந்து கடன் வாங்கிய நபரை வலுக்கட்டாயமாக பைக்கில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.
இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட அந்த நபரால் பைக்கின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடுவதற்கு மிகவும் தடுமாறியுள்ளார். மேலும், கடன் வாங்கியவரின் பரிதாப நிலையினை பொது மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொது மக்களில் சிலர் கடன் வாங்கிய நபருக்கு ஆதரவாக, பைக்கினை ஓட்டிச் சென்றவர்களை தடுக்க முயன்றபோது, கூர்மையான ஆயுதங்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த மனிதத் தன்மையற்ற செயல் நடந்த சாலையில் மூன்று போக்குவரத்து காவல் நிலையங்கள் இருந்துள்ளன. ஆனால் அவர்கள் இந்த குற்றத்தினை தடுக்கவில்லை என்பது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த கொடுமையான சம்பவத்தின்பொது மக்கள் பலரும் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அதில் பலரும் இந்த குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும் என ஒடிசா மாநில காவல் துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளது காவல்துறை. கட்டாக்கின் சுதாஹாட் பகுதியைச் சேர்ந்த இரண்டு குற்றவாளிகளை லால்பாக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.