கொடூரமாக கொலை செய்யப்படுவது போன்ற சைக்கோ த்ரில்லர் படங்கள் தொடர்ந்து ஹிட் அடிப்பது, மக்களின் மோசமான மனநிலையை பிரதிபலிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழ் சினிமா:
சினிமா, உலக மக்களின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று. கற்பனைக்கு எட்டாத, காணக் கிடைக்காத அற்புதங்களையும், கண்கொள்ளாக் காட்சிகளையும், 100 ரூபாய் டிக்கெட்டிற்கு திரையில் கண்களுக்கான விருந்தாக காட்சிப்படுத்த வல்லது. ஆரம்ப காலங்களில் காதல், குடும்பம் போன்ற கதைக்களங்கள் மூலம் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்த சினிமா, தற்போது முக்கிய பிரசார ஊடகமாக மாறியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தான் சில படங்களின் வசனங்கள் தொடங்கி, சில படங்களின் கதைக்களமே தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்புவதை பார்க்கிறோம். இந்த நிலையில் தான், சத்தமே இல்லாமல் சைக்கோ - த்ரில்லர் என்ற படங்கள் தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளது.
சைக்கோ படங்களின் ஆதிக்கம்:
தமிழ் சினிமாவிற்கு சைக்கோ த்ரில்லர் படங்கள் என்பது புதியது ஒன்றும் இல்லை. கமலின் சிகப்பு ரோஜாக்கள் தொடங்கி ராட்சசன், சைக்கோ, நடுநிசி நாய்கள், ஆளவந்தான், மன்மதன் மற்றும் அண்மையில் வெளியான போர்தொழில் என பல படங்கள் வரிசை கட்டியுள்ளன. சினிமா மொழிகளையும் எல்லைகளையும் கடந்தது என்பதால், கெட்-அவுட், சிக்ஸ்த் சென்ஸ், அஸ், ஷா, வெர்டிகோ மற்றும் ஷட்டர் ஐலேண்ட் போன்ற பல்வேறு ஹாலிவுட் சைக்கோ படங்களும் நம்ம ஊரில் கூட சக்கை போடு போட்டுள்ளன.
மாறும் மக்களின் மனநிலை?
பொதுவாக விபத்துகளையோ, அடிபட்ட யாரையோ பார்த்தால், அவர்களுக்காக பரிதாபப்படுவது மனிதனின் இயல்பு. ஆனால், இந்த சைக்கோ த்ரில்லர் படங்களில் கதாபாத்திரங்கள் கொலை செய்யப்படும் காட்சிகளை பார்த்தால் மக்கள் அப்படி உணருவதில்லை. தங்களுக்கு உள்ள ஏதேனும் ஒரு குறைபாட்டை சமூகம் ஏற்க மறுப்பதால், அந்த சமூகத்தையே எதிரியாக நினைத்து கொலை செய்யும் வகையில் தான் இந்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருக்கும்.
பெரும்பாலான படங்களில் கடந்த காலத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு மற்றும் மனநிலை பாதிப்பால், அப்பாவி மக்களை காரணமே இன்றி கொலை செய்வது தான் கதைக்களமாக இருக்கும். அதிலும், அந்த கதாபாத்திரமானது கொடூரமானதாக இருக்க வேண்டும், குலை நடுங்க வைக்கும் அளவிற்கு கொலை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே நிலவுகிறது. ஏனென்றால், அந்த காட்சிகள் தங்களுக்குள்ளே இருக்கும் கோபத்தை தணிக்கும் உதவுகிறதாக பலர் கருதுகின்றனர். தங்களுக்கு ஆகாத யாரோ ஒருவரை, தானே அந்த பாணியில் கொடூரமாக கொலை செய்வதை போன்று மகிழும் மோசமான நெஞ்சம் கொண்டவர்களும் உள்ளனர்.
தவறான புரிதல்:
உண்மையில், கற்பனையில் இருந்து இந்த சைக்கோ கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுவதில்லை. அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி நிகழும் மோசமான சம்பவங்கள் தான் அந்த கதாபாத்திரங்களை உருவாக்க வழிவகுக்கின்றன. பொதுவாக, சக மனிதனை மதிப்பது, அரவணப்பது, அன்பு செலுத்துவது என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, ஆற்றாத் துயரில் சிக்கி தவிக்கும் ஒருவருக்கு மேற்குறிப்பட்டவை கிடைக்காவிட்டால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு எந்த அளவிற்கு மோசமான நபராக மாற்றக்கூடும் என்பதை தான் இந்த மாதிரியான படங்கள் விளக்க முற்படுகின்றன.
ஆனால், சமூகத்திற்கான அந்த கருத்தை ஆழ பதியவைக்கும் அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தாமல், வணிக நோக்கத்திற்காக சண்டைகள், மாஸ் ஆன சீன்கள் ஆகியவற்றை கட்டமைத்து தங்களுக்கான பொறுப்பை கோட்டை விடுகின்றனர் இயக்குனர்கள். இதனால், படத்தின் உண்மை கருத்தை அறிய தவறும் மக்கள், அதில் காட்டப்படும் கொடூரமான கொலைகள், கொலை செய்யும் எண்ணங்கள் மற்றும் கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டாடுகின்றனர்.
எச்சரிக்கும் மருத்துவர்கள்:
இதுதொடர்பாக பேசிய உளவியல் நிபுணர் சித்ரா “காதல் என்பதை போன்று கோபம் என்பது பெரும்பாலானோரின் இயல்பான குணமாக உள்ளது. அதனை பயன்படுத்தி படமெடுத்து பணம் பார்க்க தான் பலர் விரும்புகின்றனர். ஆனால், இதுபோன்ற படங்கள் மக்களின் கோவ குணத்தை தூண்டி விட வாய்ப்புள்ளது. சிலருக்கு நாம் ஏன் கொலை செய்யக் கூடாது என்ற உணர்வை தரும், சில பேருக்கு நம்மை யாரேனும் இதுபோன்று கொன்று விடுவார்களோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிகப்படியான கோபம் மற்றும் அச்சம் கொண்டவர்கள் தான் பொதுவாகவே இதுபோன்ற படங்களை அதிகம் பார்க்கின்றனர். அதன்மூலம் தங்களை பலமானவர்களாக காட்ட முற்படுகின்றனர். ஆனால், மனதளவில் பலவீனமாக உள்ளவர்கள் இதுபோன்ற படங்களை தவிர்ப்பதே நல்லது. இரண்டரை மணி நேரம் அனைத்து கொடூரங்களையும் காட்டிவிட்டு, கடைசி 2 நிமிடங்கள் அறிவுரை சொல்லிவிட்டால் அது மக்கள் மனதில் நின்றுவிடுமா? “ என கேள்வி எழுப்புகிறார்.
போர் தொழில் சொன்ன பாடம்:
இதுவரை தமிழ் சினிமா காட்டிய பெரும்பாலான சைக்கோ படங்களில் கொலைகாரர்கள் தனிமையில் வாடுபவர்களாக தான் இருக்கிறார்கள். அத்தகையை நிஜ உலக நபர்களுக்கு தேவையானது என்பது சக மனிதனின் நம்பிக்கையான வார்த்தைகளும், ஆறுதல் மட்டுமே. அதை அண்மையில் வெளியாகி இருந்த போர் தொழில் திரைப்படம் கடைசி 2 நிமிடங்களில் சற்றே விளக்கி இருந்தது.
நேசிக்க கற்றுகொடுங்கள்:
ஒரு மனிதனின் மனதளவிலான பிரச்னைக்கு சரியான அன்பும், அரவணைப்பும் கிடைத்தாலே போதுமானது என்பதை கூட கூறாமல், கொடூரமாகவும், கோரமாகவும் கொலை செய்யும் காட்சிகளை மட்டுமே திணித்து வியாபார நோக்கில் பலர் படங்களை வெளியிடுகின்றனர். தைரியத்தை ஊட்டுகிறோம் என்ற பெயரில் பொறுப்பில்லாத ஒரு சில பெற்றோர் இத்தகையை வன்முறை நிறைந்த படங்களை தங்களது சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு எல்லாம் காட்டும் முட்டாள் தனத்தையும் நம்மால் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இதுபோன்ற படங்களை தவிர்த்து சக மனிதனை நேசிப்பது தான் அடிப்படை மனித நேயம் என்பதை, சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதே, நாளைய தலைமுறை ஒரு வளமான சமூகமாக மாறுவதற்கான சரியான வழிகாட்டுதலாக இருக்கும்.