பெண்கள் பலரும் தங்கள் வாழ்நாளில் சில சமயங்களிலாவது ஹார்மோன் சமநிலையின்மைப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். மன அழுத்தம், நீரிழிவு நோயை ஏற்படுத்தும் வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கங்கள் முதலான பல்வேறு காரணங்களால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகின்றது. பலரும் அதனைக் கணிக்க தவறுவதால் PCOD, தைராய்ட் பிரச்சினைகள், மலட்டுத் தன்மை முதலான சிக்கல்கள் ஏற்படுகின்றன. 


ஹார்மோன் சமநிலையின்மை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆயுர்வேத மருத்துவ நிபுணர் தீக்‌ஷா பவ்சார், `உங்கள் மன அழுத்தம், உடல்நலக் கோளாறு முதலான பல்வேறு குறைபாடுகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம்’ என்று கூறுவதோடு, அதன் தொடக்க கால அறிகுறிகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். 


Mood swings மனநிலை


ஒரு நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பது, மற்றொரு நேரத்தில் கடும் கோபம் கொள்வது, சில நேரத்திற்குப் பிறகு கவலை கொள்வது என்று உணர்வுகள் ஏற்பட்டால் அதனை உடனே கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஹார்மோன் சமநிலையின்மைக்கான முதன்மை அறிகுறி. 






உடல் சோர்வு


நல்ல உறக்கத்திற்குப் பிறகும் அதிகாலை எழும் போது உடல் சோர்வாக இருப்பதாக உணர்வது ஹார்மோன் சமநிலையின்மையின் மற்றொரு அறிகுறி. 



முடி கொட்டுதல்


நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் போதும், அதிகமாக முடி கொட்டுவது ஹார்மோன் சமநிலையின்மையைக் குறிக்கும். 


திடீர் உடல் எடை அதிகரிப்பு


ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, உடல் எடை அதிகரிக்கலாம். தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஆரோக்கியமான உணவை உண்பது, நன்கு தூங்குவது ஆகியவற்றைக் கடைபிடித்தும், உடல் எடை அதிகரித்தால் மருத்துவரை அணுக வேண்டும். 


சருமப் பிரச்னைகள்


முகப்பரு, முகத்திலும், தோலிலும் ஏற்படும் மடிப்புகள், தோல் வறட்சி, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் ஆகியவையும் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகள். 



ஒழுங்கற்ற, வலிமிகுந்த மாதவிடாய்க் காலம்


மாதவிடாய் நேரம் தவறி முன்போ, பின்போ ஏற்படுவதோடு, அதிக வலிமிக்கதாக இருந்தாலும், அது ஹார்மோன் சமநிலையின்மையைக் குறிக்கலாம். 


செரிமானக் குறைபாடுகள்


மலச்சிக்கல், பசியின்மை, அசிடிட்டி, உணவுக்குப் பின் மந்தமாக உணர்தல் ஆகியவை வயிற்றுப் பிரச்னைகளைக் குறிக்கின்றன. இவையும் ஹார்மோன் பிரச்சினைகளின் அறிகுறிகள். 


உறக்கத்தில் பிரச்னைகள்


தூக்கமின்மை, இடையூறுகள் நிறைந்த உறக்கம். 9 மணி நேரங்களுக்கும் மேல் உறங்கியும் உடல் சோர்வு ஆகியவை ஹார்மோன் பிரச்சினைகளாக இருக்கக்கூடும். 


வாழ்க்கை முறையில் மாற்றம், உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, தேவைப்பட்டால் ஆயுர்வேத மருந்துகள் உண்பது முதலானவற்றின் மூலமாக ஹார்மோன் சமநிலையின்மையைச் சரிசெய்யலாம் என மருத்துவர் தீக்‌ஷா பவ்சார் கூறியுள்ளார்.