கோடைக்காலத்தை சமாளிக்க விதவிதமாக சந்தைகள் ஜூஸ்கள் விற்பனை செய்யப்பட்டாலும், சுவையோடு ஆரோக்கியத்தை தரும் ஏலக்காய் ஜூஸ் அல்லது சர்பத் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் வந்துவிட்டதா? ஐய்யோ எப்படி இந்த வெயிலை சமாளிக்கப்போகிறோம் என்ற மனநிலை மக்கள் மனதில் அதிகளவில் எழக்கூடும். அதற்கேற்றால் போல் தான் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனை சமாளிக்கும் விதமாக குளிர்பானங்கள், இளநீர், விதவிதமான ஜூஸ்கள், ஐஸ்கிரீம்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. என்ன இதனையெல்லாம் வேலைக்காக வெளியில் செல்பவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் சிரமமான விஷயம். இருந்தப்போதும் கடைகளில் பார்சல் வாங்கிக்கொண்டு வந்து பருகுவார்கள்.
இனிமேல் இந்த கவலை உங்களுக்கு வேண்டாம். கோடைக்காலத்தை சமாளிக்க, நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஏலக்காயைப்பயன்படுத்தி சர்பத் செய்து பருகலாம். இந்த ஏலக்காய் சர்பத் பாக்டீரியா தொற்றுநோயை எதிர்த்துப்போராடுவதோடு நமது கல்லீரையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவியாக உள்ளது. இதோடு மட்டுமின்றி குறிப்பாக உடல் எடையைக்குறைக்கவும் மக்களுக்கு பேருதவியாக உள்ளது. எனவே இந்நேரத்தில் கோடைக்காலத்தில் மக்களைக் காப்பாற்றுவதற்கும், சுவையோடு ஆரோக்கியத்தையும் நமக்கு அள்ளிக்கொடுக்கும் ஏலக்காய் சர்பத், ஜூஸ் எப்படி செய்வது என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
கோடை வெயிலை சமாளிக்க ஆரோக்கியமான சர்பத் ஜூஸ் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்
1 டீஸ்பூன் - ஏலக்காய் தூள்
2 டீஸ்பூன் -எலுமிச்சை சாறு
உப்பு – 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைத் துண்டுகள் – 2
சர்க்கரை – தேவைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளலாம்.
ஐஸ் க்யூப்ஸ் – 8-10
தண்ணீர் – 4 கப்
ஏலக்காய் சர்பத் செய்முறை:
முதலில் ஏலக்காய் தோலை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் 4 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுடன் நம்முடைய சுவை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு சர்க்கரை போட்டு நன்றாக கலக்கிக்கொள்ள வேண்டும்.
இதனையடுத்து சர்க்கரை நீருடன் எலுமிச்சைச் சாறு ,சிறிதளவு உப்பு மற்றும் அரைத்து எடுத்து வைத்துள்ள ஏலக்காய் தூளை அதனுடன் கலந்து கரைக்க வேண்டும்.
இதன்பிறகு ஏலக்காய் சர்பத் கலவையுடன், ஒரு சில ஐஸ் கட்டிகளைச் சேர்த்து அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
இறுதியில் ஒரு டம்பளில் நாம் தயார் செய்து வைத்துள்ள ஏலக்காய் ஜூஸ் அல்லது ஏலக்காய் சர்பத்துடன் 2-3 ஜஸ் க்யூப்ஸ் மற்றும் எலுமிச்சை துண்டுகளைச்சேர்ந்து பருகலாம்.
எலுமிச்சை, ஏலக்காய், சர்க்கரை போன்றவை இந்த ஏலக்காய் சர்பத்தில் கலந்து இருப்பதால் நமக்கு ஆரோக்கியமாகவும், வெயிலுக்கு நம்முடைய உடல் சோர்வாகமால் இருக்க பெரும் உதவியாக இருக்கும். எனவே நீங்களும் இனி மேல் வீட்டில் தயார் செய்து பருக மறந்துவிடாதீர்கள்.