கணையப் புற்றுநோய் (Pancreatic cancer) என்பது வயிற்றுக்குப் பின்னால் அமைந்துள்ள சுரப்பியான கணையத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாட்டை மீறி பெருக்கெடுக்க ஆரம்பிக்கும் போது கணைய புற்று நோய் உருவாகிறது. இந்த புற்றுநோய் உயிரணுக்கள் மெல்ல மெல்ல உடலின் பிற பாகங்களையும் ஆக்கிரமிக்கின்ற திறனைக் கொண்டவையாகும். கணையம் இரண்டு ஹார்மோன்களை சுரக்கிறது. குளுகோஜன் மற்றும் இன்சுலின். இந்த இரண்டு ஹார்மோன்களும் தான் க்ளுகோஸ் மெட்டாபாலிஸம் எனப்படும் ஆற்றலுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.


கணையப் புற்றுநோய் அறிகுறிகள் என்ன?


பொதுவாகவே பல்வேறு வகையான புற்றுநோய்களும் அது அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் எனப்படும் கடைசிக்கட்டத்தை எட்டும்போதே அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. சிலவகை புற்றுநோய்களில் அட்வான்ஸ்ட் ஸ்டேஜில் கூட அறிகுறிகள் தென்படுவதில்லை. இந்நிலையில் கணையப் புற்றுநோய் பாதிப்பை சில அறிகுறிகள் மூலம் கணிக்கலாம்.


1.பசியின்மை. இது எல்லா வகையான புற்றுநோயாளிகளுக்கும் இருக்கும்.
2.காரணமின்றி குறையும் உடல் எடை.
3.அடிவயிற்றில் அகோர வலி. அது பின்புறம் வரை பரவும்.
4.கால்களில் ரத்தக் கட்டு. அது சிவந்து வலி மிகுந்து வீக்கத்துடன் காணப்படலாம்.
5. மஞ்சள் காமாளை. 
6. வாந்தி, குமட்டல்


இதுபோன்ற அறிகுறிகள் அனைத்துமே கணையப் புற்றுநோயாளிகளுக்கு ஏற்படலாம்.இந்த புற்றுநோயானது உங்கள் உடலின் உணவை ஜீரணிக்க மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை பாதிக்கும் போது இந்த அறிகுறிகள் ஏற்படும். அத்துடன் செரிமான செயல்முறைகளை மெதுவாக்கும் போது இந்த அறிகுறிகள் ஏற்படலாம். அஜீரண கோளாறுகளை தவிர, வலியும் கணைய புற்றுநோயின் பொதுவான அறிகுறியாக உள்ளது. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10 பேரில் 7 பேர் வலியை அனுபவிப்பதால் தங்கள் மருத்துவர்களிடம் செல்வதாக புற்றுநோய் ஆராய்ச்சிகள் கூறுகிறது.


கணையப் புற்றுநோய்க்கு காரணம் என்ன?


கணையத்தில் வழக்கத்திற்கு மாறான செல்கள் உருவாகி அது கணையத்தில் கட்டியாகின்றன. இதற்கான காரணம் இது தான் என்று எதுவும் வரையறுத்துக் கூறப்படவில்லை. ஆனால் இந்த செல்கள் உருவாகிவிட்டால் அவை பெருகிவிடுகின்றன. 


புகைப்பிடித்தால் வருமா?


புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும் என்பது அறிந்ததே. ஆனால் நுரையீரல் புற்றுநோயே புகைப்பிடிப்பவர்களுக்கு அதிகமாக வரும் சூழலில் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் 20 முதல் 35 சதவீதம் பேருக்கு கணையப் புற்றுநோயும் வருகிறது.


மதுப்பழக்கத்திற்கும் கணையப் புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு?


மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு குடல் தொடங்கி பல்வேறு புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மது அருந்துபவர்களுக்கு பேன்க்ரியாடிடிஸ் எனும் நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது.


உடல் எடை:


உடல் அடை அதிகமாக இருந்தால் அதுவும் வயதானவர்களில் உடல் எடை அதிகமாக இருந்தால் அது கணையப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்.


சர்க்கரை வியாதி:


சர்க்கரை வியாதி பல்வேறு நோய்களையும் வரவேற்கும். குறிப்பாக இன்சுலின், குளுக்கோஜன் ஹார்மோன்களை சுரக்கும் கணையத்திலும் புற்றுநோயை ஏற்படுத்தும். டைப் 1, டைப் 2 என இருவகையான சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கணையப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.


டயட்:


பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி, பொறித்த உணவு, இனிப்பு வகைகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு கணையப் புற்றுநோய்க்கான வாய்ப்பு அதிகம்.


புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டு கூற முடியாவிட்டாலும் கூட வாழ்க்கை முறையால் தான் இதுபோன்ற வாழ்வியல் நோய்கள் வருகின்றன என்று பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. சர்க்கரை, கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், புற்றுநோய் என இதுபோன்ற நோய்களுக்கு மோசமான உணவுப் பழக்கவழக்கம், சீரற்ற தூக்கம், உடற்பயிற்சியின்மை, புகை, மது போதை வஸ்துகள் பழக்கம் ஆகியன காரணமாக உள்ளன.