இளமையைப் பாதுகாக்க வேண்டுமா? இதோ உங்களுகான டிப்ஸ்.


நாட்கள் செல்ல செல்ல நாம் அதிகம் கவலை  கொள்வது என்னவாக இருக்கும்? வயதாகிக் கொண்டே செல்கிறது என்பதுதான். எல்லோருக்கும் என்றும் இளமை மாறாமல் இருக்கத்தான் விருப்பம். எதற்கும் வயது என்பது தடையில்லை என்று சொன்னாலும், வயதிற்கு ஏற்றவாறு நம் உடலிலும் மாற்றங்கள் நிகழ்வது இயற்கையானது. ஆனால் முதுமையைத் தள்ளிப்போடுவதற்கான வழிகளும் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு முதல் நம் வாழ்க்கை முறை வரை என நம் இளமையான தேகத்தின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு இருக்கிறது.


நீங்கள் உங்களுக்கு வயதாவதின் காலத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணினால், உங்களுடைய அன்றாட பழக்கங்களில் சிலவற்றை மாற்ற வேண்டும். திட்டமிடுதலுடன் கூடிய சில செயல்திட்டங்கள் அவசியமாகிறது. நம் தினசரி நடவடிக்கைகள், உணவு முறைகளில் ஆரோக்கியமான வழிகளை மேற்கொண்டாலே போதும், உங்களுக்கு என்றும் இளமை சாத்தியம்தான். ஆண்டி-ஏஜிங்க்கிற்கான மாத்திரை மருந்துக்களுக்கான தேவை இருக்காது. இதோ நீங்கள் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்.


மறதி, பொலிவற்ற தேகம், எலும்பு தேய்மானம் ஆகியவைகள் வயதாவற்கான அறிகுறிகள். இன்றைய காலத்தில் மாறிவரும் வாழ்க்கைச் சூழலால் மன அழுத்தம், மனச்சோர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் நாம் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்தபடியான வேலைச்சூழல். உடல் உழைப்பு குறைந்துவிட்டதுதான் முக்கியமான காரணம். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. அதிக நேரம் உட்கார்ந்து இருக்காமல், அடிக்கடி எழுந்து நடப்பது கொஞ்சம் பயனளிக்கும்.


மனச்சோர்வு , மன அழுத்தம் காரணமாக அதிகமாக துரித உணவுகளைச் சாப்பிடுவதும் உங்கள் உடலில் அதிக அளவில் ஆரோக்கியமற்ற கொழுப்பைச் சேர்த்துவிடுகிறது. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுவே நீங்கள். ஆரோக்கியமான உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். மன அழுத்தத்தை சமாளிக்க இசைக் கேட்பது, புத்தகம் வாசிப்பு, ஓவியம் வரைதல் உள்ளிட்டவைகள் உங்களுக்கு உதவும். உங்களுக்கு மகிழ்ச்சித் தருவதைச் செய்யுங்கள்.  சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ள ஆரோக்கியமில்லா உணவிற்கு நோ சொல்லிப் பழகுங்கள்.


ஆரோக்கியமான வாழ்விற்கும், இளமையுடன் இருப்பதற்கும் உடற்பயிற்சி இன்றியமையாதது. இந்த கொரோனா காலத்தில் நாம் அதிகமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டோம். ஆனால் உங்கள் ஷுக்களை எடுங்கள். தினம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.  அவசர வாழ்க்கையில் உங்கள் உடல், மன ஆரோக்கியதிற்காக நேரம் ஒதுக்குங்கள். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை தவறாமல் செய்யுங்கள். நடக்க வாய்ப்புக் கிடைக்கும்போதேல்லாம் நடப்பதை உறுதி செய்யுங்கள்.


குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இவையெல்லாம் வயதாவதைத் துரிதப்படுத்திவிடும். ஆகவே, இவைகளுக்கு பெரிய நோதான் உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். அதிக ஸ்மாட்போன் பயன்பாடும் உடல்நலத்திற்கு கேடானது. தேவையில்லாமல் ஸ்மாட்போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். சிரிப்பு உங்களை இளமையுடன் பாதுகாக்கும். குறைவான தூக்கம் இளமைக்கு எதிரி. தினமும் உடற்பயிற்சியுடன் கூடிய சரிவிகித உணவும், மகிழ்ச்சியான மனமும் உங்களை என்றும் இளமையுடன் வைத்திருக்கும்.