இந்தியாவில் குழந்தைகள் முதல் பெண்கள் வரை பலர் உடல் பருமன் நோயினால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரித்திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிதி ஆயோக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


இந்தியாவில் வாழும் மக்கள் பழக்க வழக்கம், உடை போன்ற பலவற்றை இன்றைக்குள்ள கலாச்சார  மாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் தான் பல நேரங்களில் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கக் காரணமாக அமைகிறது. அதில் முக்கியமானது உணவு பழக்க வழக்கம். ஆம் தற்போது நாளுக்கு நாள் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஆசைக்காக அத்தனையும் சாப்பிட்டுவிட்டு தற்போது மக்கள் உடல் பருமன் நோயினால் அவதிப்படுகின்றனர்.





குறிப்பாக  தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) 2019-20படி, பருமனான பெண்களின் சதவீதம் 2015-16ல் 20.6 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேப்போன்று கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 18.4 சதவீதமாக இருந்த ஆண்களின் சதவீதம் தற்போது 22.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் குழந்தைப்பெறும் தாய்மார்கள், இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகளவில் ஏற்படுவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றனர். இவ்வாறு நாளுக்கு நாள் அதிகமாகும் பட்சத்தில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால், இதனை எப்படியாவது தடுத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அதிகரித்துவரும் உடல் பருமனை சமாளிக்க நிதி ஆயோக் அமைப்பு சில திட்டங்களை முயற்சித்துவருகிறது. மேலும் இதற்காகவே வல்லுநர் குழு ஒன்றை நிதி ஆயோக் அமைத்துள்ளது.


இந்த வல்லுநர் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தியதின் விளைவாக, 2021- 202 ஆம் ஆண்டிற்காக ஆண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதோடு, என்ன செய்யலாம் என்பது குறித்து தெளிவாக கூறியுள்ளது. பொதுவாக மக்கள் துரித உணவுகளின் மேல் அதிகம் நாட்டம் காட்டுவதன் விளைவு தான் உடல் பருமன். எனவே இதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு அதிக வரி விதிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதனால் இத்தகைய உணவு பொருள்களின் விலையும் உயரும் என்பதால் மக்கள் உபயோகிக்க சற்று யோசிப்பார்கள். எனவே இதனால் மக்கள் தொகையில், உடல் பருமன் அதிகரித்து வருவதை சமாளிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உணவுப்பொட்டலங்களின் முன பகுதியிலேயே இதுக்குறித்து லேபிள் ஒட்டப்படுவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம்.





இதோடு தற்போதைய சூழலில் பிராண்டட் இல்லாத நம்கீன்கள். புஜியாக்கள், காய்கறி சிப்ஸ் மற்றும் சிற்றுண்டி உணவுகளுக்கு 5 சதவீத ஜிஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.  பிராண்டட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் "நிதி ஆயோக், IEG மற்றும் PHFI உடன் இணைந்து, எச்எஃப்எஸ்எஸ் உணவுப்பொட்டலங்களின் முன்பக்கத்தில் உப்பு,சர்க்கரை அளவுகுறித்து லேபிளிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி கொழுப்புகள், சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு வரிவிதிப்பு போன்ற மத்திய அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கான ஆதாரங்களை மதிப்பாய்வு செய்ததோடு, நிதிஆயோக் 2021-22 ஆண்டறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.