பொதுமக்களின் குழந்தை ஆசையை பயன்படுத்தி தனியார் கருத்தரிப்பு மையங்கள், லட்சங்களை சுரண்டி வரும் நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் தமிழகத்தில் அமைய உள்ளது.


குழந்தையின்மை பிரச்னை:


உணவு, காலநிலை போன்ற பல்வேறு காரணங்களால் மனிதனின் வாழ்வியல் என்பதே தற்போது முற்றிலும் மாற்றம் கண்டுள்ளது. இதனால், மனிதன் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு புதுப்புது வியாதிகளுக்கும், குறைகளுக்கும் ஆளாகி வருகிரான். அதில், முக்கியமான பிரச்னை தம்பதி எதிர்கொள்ளும் குழந்தையின்மை. இது கணவன் - மனைவி என்பதை தாண்டி, இருதரப்பு குடும்பத்தாரலும் பெரும் பிரச்னையாக காணப்படுகிறது. உளவியல் ரீதியாகவும் கணவன் மனைவி இடையே விரிசலை ஏற்படுத்தி, திருமண பந்தமே முறிவதற்கு கூட காரணமாகிறது.


கருத்தரிப்பு மையங்கள்:


மக்களின் இந்த சூழலை வியாபராமாக மாற்றி தான், தற்போது பெருநகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரையிலும் தனியார் கருத்தரிப்பு மையங்கள் பரந்து விரிந்துள்ளன. நமக்கான ஒரு குழந்தை பிறந்து விடாத என்ற ஏக்கத்தில் தவிக்கும், தம்பதிகள் எவ்வளவு செலவாகினாலும் பரவாயில்லை என இந்த கருத்தரிப்பு மையங்களில் பணத்தை தண்ணீராக செலவு செய்து வருகின்றனர்.


குவியும் விளம்பரங்கள், லட்சங்களில் கட்டணம்:


தங்களது மையங்களுக்கு வந்தால் 100% குழந்தை பிறக்கும் என உத்திரவாதம் தந்து தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்துகின்றன தனியார் கருத்தரிப்பு மையங்கள். ஆடி மாதத்தில் துணிக்கடைகளில் சலுகை வழங்குவது போல, சிறப்பு சல்லுகைகளை எல்லாம் அறிவிக்கின்றனர். அவ்வாறு சிகிச்சைக்காக வருபவர்களின் லட்சங்களில் கட்டணங்களை வாங்கி குவிக்கின்றனர்.  ஆனால் நிஜத்தில் செயற்கை கருத்தரிப்பு மூலமாக எல்லோருக்கும் தீர்வு சொல்ல முடியாது என்பதே அறிவியல் சொல்லும் எதார்த்தம். 


ஏழைகளுக்கு எட்டாக்கனி:


ஆனாலும், பலரது வாழ்வில் குழந்தை பாக்கியம் ஏற்பட்டு மகிழ்ச்சியாக இருப்பதற்கு கருத்தரிப்பு மையங்கள் தான் காரணமாக உள்ளது. அந்த வாய்ப்பு நமக்கும் கிடைக்காத என்ற நம்பிக்கையில் இந்த சிகிச்சைக்கு செல்கின்றனர். அதேநேரம் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்,  லட்சக்கணக்கில் ஆகும் செலவால் இந்த சிகிச்சை முறை நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இது எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால், பலரது குழந்தை கனவு என்பது இன்றளவும் கானல் நீராகவே உள்ளது. 


மறைக்கப்படும் உண்மைகள்:


இதனிடையே, தங்களிடம் வருபவர்களுக்கு எப்படியேனும் குழந்தையின்மை பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதையே கருத்தரிப்பு மையங்கள் குறிக்கோளாக கொண்டுள்ளன. இதனால், பல உண்மைகளை அவை மறைப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. பல கருத்தரிப்பு மையங்களில்  கருவைச் சுமக்கும் தாயின் உடல்நிலையை பற்றி சில கவலைப்படுவதில்லை.  குழந்தை தங்க வேண்டும் என்பதற்காக  செலுத்தப்படும் ஹார்மோன் ஊசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து  தெளிவாக  சிகிச்சைக்கு வருபவர்களிடம் விளக்குவதே கிடையாது. தம்பதியின் உரிய அனுமதியையே பெறாமலேயே வேறு ஒருவரின் கருமுட்டயை பெண்ணைன் வயிற்றில் வைப்பது போன்றவையும் நடைபெற்று வருகிறது. அதோடு, கருத்தரிப்பு மையம் ஒன்றில் அண்மையில் கருமுட்டை திருடப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. 


அரசுக்கு கோரிக்கை..!


குழந்தையின்மை என்பது ஒரு பொதுவான பிரச்னையாகவும், ஒரு பெரும் வணிகமாகவும் மாறியுள்ள நிலையில் இதற்கான சிகிச்சையை அரசாங்கமே வழங்க வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். சிலர் நீதிமன்றங்களையும் நாடினார். லட்சங்களில் செலவு, அச்சுறுத்தும் மோசடிகளை தவிர்க்க அரசே கருத்தரிப்பில் உள்ள பிரச்னைகளுக்கான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தமிழகத்தில் இத்தனையா?


கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி வெளியான ஒரு தகவலின்படி, சென்னையில் 59, கோயமுத்தூரில் 14, மதுரையில் 11 மையங்கள் என தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 155 தனியார் கருத்தரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 40க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் செயல்பட்டு வந்தாலும் அதில் ஒன்றில் கூட கருத்தரிப்பு மையம் வசதி இல்லை என தெரிய வந்தது.


இந்தியாவில் முதன்முறையாக..!


இந்நிலையில் தான் இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அரசு சார்பில் இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு இதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கி, சென்னை மற்றும் மதுரையில் இதற்கான மையங்களை கட்டி முடித்துள்ளது. விரைவில் அவை பயன்பாட்டிற்கும் வர உள்ளன. அதிகப்படியான செலவால் குழந்தை பெறும் பாக்கியம் இன்றி தவித்து வரும், பல தம்பதிகளுக்கு இது ஒரு பெரும் நற்செய்தியாக இருக்கும் என கருதப்படுகிறது. அதோடு, இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.