உடலுறவு என்றாலே அது ஆண்களுக்கு மட்டும்தான் மகிழ்ச்சி பெண்களுக்கு வலி என்கிற பயத்தை அரதப்பழைய லாஜிக் தமிழ் சினிமாக்கள் உண்டாக்கி வைத்திருக்கின்றன. ஒருவரை ஒருவர் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியும் கொண்டாட்டத்துடன் பகிர்ந்துகொள்ளும் பலவற்றில் உடலுறவும் ஒன்று. ஆனால் இறுக்கிப் பிடிக்கும் கைகளைக் க்ளோசப்பில் காட்டும் சினிமா வழியாக மட்டுமே உடலுறவு பற்றி அறிந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு அது குறித்த அரைகுறைப் புரிதலும் பொய்யான பிம்பமும் மட்டுமே இன்றுவரை தெரிந்துள்ளது. குறைந்தபட்சம் உடலுறவு குறித்த புரிதலுக்கும் பரஸ்பரம் நேசிப்பவரின் உடல் குறித்த புரிதலுக்குமாவது பாலியல் கல்வி அவசியம் என்று வலியுறுத்தப்படுவது இதற்குதான். 


சரி விஷயத்துக்கு வருவோம், நிஜமாகவே உடலுறுவின்போது பெண்களுக்கு வலிக்குமா? ஆண்களுக்கு மட்டும்தான் மகிழ்ச்சியா? அப்படி உடலுறவின்போது வலி ஏற்பட்டால் என்ன செய்வது? 


விளக்குகிறார் மருத்துவர், 


எல்லாப் பெண்களுக்கும் உடலுறவின்போது வலிக்காது. ஒருவேளை கர்பப்பையில் பிரச்னை இருந்தாலோ அல்லது பிறப்புறுப்பு வாயில் (Vulva) தொற்று இருந்தாலோ மட்டும்தான் வலி இருக்கும். அதனால் பிடித்தவர்களுடன் பிடித்தமான உடலுறவுக்குத் தடா சொல்லவேண்டாம் என அட்வைஸ் செய்கிறார். 


எந்தெந்த சூழலில் எல்லாம் உடலுறவில் வலி இருக்கும்? 


- ஒருவேளை கர்ப்பப்பையின் நுனி சற்று திரும்பியிருந்தால் வலிக்கும்.இந்தச் சூழலில் நார்மலான பொசிஷனில் அல்லாது வேறு சில பொசிஷனில் உடலுறவு கொள்வது கர்ப்பப்பையும் பாதுகாப்பும் உடலுறவும் எளிதாக இருக்கும். 


- ஒருவேளைத் தொற்று இருந்தால் மருத்துவரிடம் கேட்டு மருந்து உட்கொள்ளலாம். அது வாய்வழி மாத்திரையாகவோ அல்லது பிறப்புறுப்பில் வைக்கும் மாத்திரையாகவோ கொடுக்கப்படும்.


- சில பெண்களுக்கு பிறப்புறுப்பு வாய் வறண்டுபோவதால் வலி ஏற்படும். அதனை முடிந்தவரை ஈரப்பதத்துடன் வைத்திருக்க க்ரீம் அல்லது ஜெல்லி (lubricant) போன்றவற்றைத் தடவலாம்..வலிக்குமா என பயப்படும் ஆண்களும் இதனை உபயோகிக்கலாம். அது உடலுறவை வலியற்றதாக்கும். இந்தக் க்ரீம்கள் பொதுவாக மருந்தகங்களிலேயே கிடைக்கும்.


-பிறப்புறுப்பு தசைகளை ரிலாக்ஸ்டாக வைத்திருக்க கால்களை நன்கு விரித்து மடக்கி பயிற்சி செய்யலாம். இதனால் தசைகள் இலகுவாகி உடலுறவின்பொது வலி ஏற்படுவதைக் குறைக்கும்.


- ஒருவேளை மருத்துவப் பரிசோதனையின் அடிப்படையில் கர்ப்பப்பையில் கட்டி உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின்படி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. சிகிச்சை காலத்தில் உடலுறுவு கொள்வது குறித்து மருத்துவரிடமே ஆலோசனை பெறலாம். 


- சில நேரங்களில் மன அழுத்தம் இருந்தால்கூட உடலுறவின்போது வலி ஏற்படுவது போன்ற உணர்வு உண்டாகும். அதனால் பவர்நாப் எடுப்பது அல்லது உங்களது தூங்கும் நேரத்தை சீர்செய்வது போன்ற சின்னச் சின்ன மாற்றங்கள் உடலுறவு சமயத்தில் பெரிய அளவில் கைகொடுக்கும். புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் என அட்வைஸ் செய்கிறார்கள் மருத்துவர்கள்.