கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. பங்குனி வெயிலே இப்படியா கத்தரி வெயில் எப்படியோ?! என மக்கள் கதறத் தொடங்கியுள்ளனர். கோடையும் அவசியம் தான். அதனால் அதில் நாம் நமது உடல்நிலையை தற்காத்துக் கொள்ளத் தெரிந்து கொண்டால் நிச்சயமாகக் கோடையைக் கூட எளிதில் கடந்துவிடலாம்.


தினமும் வெயிலிடம் இருந்து சக்தியை பெருவதால் தூக்கம் நன்றாக வரும் என்கிறது 2014 ஆம் ஆண்டு நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வு. அதில் இரவில் நன்றாக தூங்குவது மற்றும் காலையில் நேரத்திற்கு எழுந்துருப்பதற்கான சிக்னல்ஸ் உடலில் சிறப்பாக செல்படுவதாக கூறப்பட்டுள்ளது.


Seasonal affective disorder (SAD) என அழைக்கப்படும் பருவ கோளாறுகள் உணர்சியின் நலனை பாதிப்பதாக இருக்கும். ஆனால் வெயிலில் அமர்வதன் மூலமாக அதிலிருந்து கிடைக்கும் செரோடோனின்  மனநிலையை அதிகரிப்பதோடு  அது தொடர்புடைய ஹார்மோன், கவனம் செலுத்தவும், உற்சாகமாகவும் இருக்கவும்  உதவுகிறது. ஆகையால் வெயிலும் நன்மை தரும் என்பதை அறிந்து கொள்வோம்.



சரி இப்போது கோடையைக் கடப்பதற்கான சில டிப்ஸ் அறிவோம்:


1. குளிர்ச்சியான உணவு வகைகள்..
கோடை வெயில் ஏற ஏற உடல் சூடும் எகிறும். அப்போது உடல் வெப்பத்தைத் தணிப்பது அவசியமாகிறது. அவ்வாறு தணிக்காவிட்டால் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாக நேரிடும். அதனால், கோடை காலத்தில் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். அதுதவிர தர்பூசணி, எள், தேங்காய்த் தண்ணீர், இளநீர், வெள்ளரிப் பிஞ்சு, புதினா ஆகியனவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலின் சூட்டை தணிக்க உதவுகிறது.




2. நீர்ச்சத்து குறையக்கூடாது...
கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆகையால் அன்றாடம் குறைந்தது 8 முதல் 10 டம்ப்ளர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பதை அளந்து கொண்டு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீராவது பருகுவது சாலச் சிறந்தது. அதேவேளையில் ஐஸ் வாட்டராக குடிக்க வேண்டாம். மண் பானை தண்ணீர் பருகலாம். எப்போதும் சாதாரண தண்ணீர் மட்டுமே பருகுவது சாலச் சிறந்தது.




3. கோடை கால உணவுகளை மிஸ் பண்ணாதீங்க..
ஒவ்வொரு பருவத்திலும் ஒருசில காய், பழங்கள் கிடைக்கும். அது இயற்கை நமக்குக் கொடுக்கும் வரம். அந்த வரத்தை தவறவிடக் கூடாது. உதாரணத்துக்கு கோடை வந்துவிட்டால் கூடவே தர்பூசணி, வெள்ளரி வந்துவிடும். அவற்றைத் தவற விடாமல் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.


4. எளிதில் செரிமானமாகும் உணவுகள்.. 
எளிதில் செரிமானமாகும் உணவுகளைத் தெரிவு செய்து கோடையில் உண்ணுங்கள். எண்ணெய், மசாலா அதிகமாக இருக்கும் உணவை கோடை முடியும் வரை சற்றே ஒதுக்கி வைக்கலாம். ஸ்நாக்ஸ் டைமில் கூட பழங்கள், லஸ்ஸி, தயிர் சார்ந்த உணவுகள் என மாற்றிக் கொள்ளலாம். மூன்று மாதங்கள் தானே.. இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக் கொண்டால் கோடையும் சுகமாகும், வாடையும் இதமாகும். இயற்கையை சமாளிக்க இயற்கை தான் வழி.