சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கண்களை சிவப்பாக்கி வலி, எரிச்சல், உறுத்தலை உண்டாக்கும் வைரஸ் தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


பள்ளிச் செல்லும் மாணவ, மாணவிகள் எச்சரிக்கை


இந்த கண் காய்ச்சல் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகம் பரவி வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவரின் கண் நீரில் இருந்து பரவும் தொற்று எளிதாக மற்றவருக்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது. மெட்ராஸ் ஐ என்ற வகை தொற்று போல கண்ணில் இருந்து வடியும் நீரை தொடுவதாலும் அதே கையால் பிறரை தொடுவதாலும் அவர்களுக்கும் இந்த தொற்று பரவும் அபாயம் இருக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


பருவ மாற்றத்தால் ஏற்படும் தொற்று


மழை, வெய்யில், பனி என தற்போதைய பருவ கால சூழல் மாறி மாறி வருவதால் இந்த தொற்று பரவி வருவதாகவும் கண் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களுக்கு அந்த தொற்றின் காரணமாக காய்ச்சல், சளி, தொண்டை, உடல் வலி ஆகியவை ஏற்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது இன்ப்ளூயன்ஸா வகை தொற்று மட்டுமே என்பதால் பெரிய அளவில் பாதிப்பை இது ஏற்படுத்தாது என்றும் ஆனால், கண் சிவத்தல், நீர் வடிதல், எரிச்சல் போன்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது என்றும் தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






மருத்துவர்களின் அறிவுரை என்ன ?


இப்படியான அறிகுறி தென்பட்டால், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், கண் அருகே கைகளை கொண்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும், கண்களை தொடுவதை அறவே தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த கால சூழலில் மெட்ராஸ் ஐ போன்ற தொற்றுகளும் பரவும் என்பதால் பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.