ஸைடல் கேடிலா என்ற மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கோவிட் தடுப்பு மருந்தான `ஜைகோவ் டி’ மருந்து இந்தியாவின் 7 மாநிலங்களில் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் முதலான மாநிலங்களில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக மக்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தப்படாமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ஸைடஸ் கேடிலா நிறுவனம் உலகின் முதல் ப்ளாஸ்மிட் டி.என்.ஏ கோவிட் தடுப்பு மருந்தாக `ஜைகோவ் டி’ மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இந்த மாதத்தின் இறுதிக்குள் மத்திய அரசுக்கு சுமார் 1 கோடி மருந்துகளை வழங்கவுள்ளது. ஏற்கனவே ஜைகோவ் டி மருந்துகள் 1 கோடி என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாக மத்திய அரசு ஸைடஸ் கேடிலா நிறுவனத்திடம் இருந்து கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய அரசின் தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை மாநில அரசுகளின் சுகாதாரத் துறை செயலாளர்களையும், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர்களையும் கடந்த டிசம்பர் 02 அன்று வீடியோ கான்பரசிங் மூலமாகச் சந்தித்து அறிவுறுத்தியுள்ளார். இதில் 7 மாநிலங்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாத மக்கள் அதிகம் வாழ்கின்றனர் என்பதை அறிந்து அறிவிக்குமாறு கூறியுள்ளார். இந்த மாவட்டங்களில் ஜைகோவ் டி தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படும். 



ஏற்கனவே மத்திய அரசு ஜைகோவ் டி தடுப்பு மருந்து ஒரு டோஸ் 265 ரூபாய் என்ற விலையிலும், ஊசியில்லாமல் மருந்து செலுத்தும் கருவியை ஒரு டோஸ் 93 ரூபாய் என்ற விலையிலும் வாங்கியுள்ளது. 


இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியத்தால் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் மருந்தாக ஜைகோவ் டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தற்போது 7 மாநிலங்களில் வாழும் பெரியவர்களுக்கு மட்டுமே ஜைகோவ் டி செலுத்தப்படும். 


ஜைகோவ் டி தடுப்பு மருந்து செலுத்தும் விதிமுறைகளையும், அதனை நிர்வகிக்கும் முறைகளையும் குறித்து தேசிய அளவிலான பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும், பயிற்சிகள் முடிந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 7 மாநிலங்களும் இந்தப் பயிற்சிக்கு தடுப்பு மருந்து செலுத்தும் மருத்துவர்கள், செவிலியர்கண் ஆகியோருக்கான பயிற்சிகளுக்காகத் திட்டமிட வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 



ஜைகோவ் டி தடுப்பு மருந்து சுமார் 25 டிகிரி தட்ப வெட்ப நிலையில் சுமார் 3 மாதங்கள் வரை இருப்பு வைக்கும் அளவிலான தன்மை கொண்டது. வழக்கமான ஊசிகளைப் போல இல்லாமல், `ஃபார்மாஜெட்’ என்றழைக்கப்படும் ஊசியில்லா கருவியின் மூலமாக ஜைகோவ் டி தடுப்பு மருந்து செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வலியில்லாமல் உடலுக்குள் கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்படுவதோடு, பக்க விளைவுகள் பெரிதாக ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. 


மூன்று தவணைகளில் செலுத்தப்படும் ஜைகோவ் டி தடுப்பு மருந்து, 28 நாள்கள் இடைவெளியில் செலுத்தப்படும்.