குறைவான நோய்எதிர்ப்புசக்தி கொண்டவர்கள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், பூஸ்டர் தேவைப்படலாம் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவன அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதன் ஆதிக்கத்தை செலுத்தியதோடு சொல்ல முடியாத அளவிற்குப் பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பசி போன்ற பல காரணங்களால் மக்கள் தவித்து வந்தனர். உலக சுகாதார நிறுவனம் முதல் மத்திய, மாநில சுகாதார அமைப்புகள் வரை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றனர். இந்த சூழலில் தான் கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனா வைரஸினால் மக்கள் கொத்து கொத்தாக அனைத்து உலக நாடுகளிலும் செத்து மடிந்தனர். குறிப்பாக இந்தியாவைப்பொறுத்தவரை ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அளவுக்கு அதிகமாக இருந்தது. கார், ஆட்டோக்களில் கூட ஆக்ஸிஜன் சிலிண்டர்களைப்பொருத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.





அந்த சூழலில் தான், கொரொனா வைரஸைக்கட்டுக்குள் கொண்டுவருவதற்காக தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். அதன் விளைவாகத் தான் சீரம் நிறுவனத்தின் கோவிஷூல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இரு தவணைகளாக செலுத்தப்படும் இந்த ஊசிகளினால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வைரஸ் தாக்குதலைக்கட்டுப்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்து வந்தது. இதனையடுத்து மக்களும் ஆர்வத்துடன் இதனைப்பயன்படுத்திவருகின்றனர்.


இந்நிலையில் ஒமிக்ரான் போன்ற மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக இவ்வகையான வைரஸ்கள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய அனைவருக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது என அறிவிக்கப்பட்ட நிலையில், செய்வதறியாமல் மக்கள் உள்ளனர். இந்த சூழலில் தான் பூஸ்டர் தடுப்பூசி பற்றிப் பேசப்பட்டுவரும் நிலையில், யாருக்கு இது தேவை? எப்போது தேவைப்படும்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்.






 


இதுக்குறித்து  டிவிட்டர் வாயிலாக கருத்துக்களைத் தெரிவித்த சௌமியா சுவாமிநாதன் 3 காரணங்களுக்காகப் பூஸ்டர் தடுப்பூசி  தேவையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். முதலில் தடுப்பூசிகள். ஒவ்வொரு தடுப்பூசிகளும் சற்று மாறுபட்டு தான் அதன் பணிகளை மேற்கொள்ளும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தாமல் நம்மைப்பாதுகாக்கும். இருந்தப்போதும் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் போன்ற மாறுபட்ட கொரோனா தொற்றிலிருந்து நம்மைக்காத்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.


அடுத்ததாக மாறுபட்ட கொரோனா வைரஸ்கள்..மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்தியைப்பொறுத்து பாதிப்பின் தன்மை அதிகரிக்கிறது. எனவே அனைவரின் நோய் எதிர்ப்பு சக்தியையும், மாறுபட்ட வைரஸின் தன்மைக்கு ஏற்றவாறு இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஒருவரின் நோய் எதிர்ப்புத் தன்மையைப்பொறுத்து, தடுப்பூசி போடுவதற்கானப் பரிந்துரைகளை நாங்கள் செய்யும்போது, ​​​​அங்குள்ள அனைத்து காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவர் சௌமியா தெரிவித்துள்ளார். குறிப்பாக இதுவரை 80 சதவீதத்திற்கும் அதிகமான நோயின் தன்மையிலிருந்து பாதுகாக்க முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கிவிட்டது.





எனவே இதுப்போன்றக் காலக்கட்டத்தில், வயதானவர்கள், குறைவான நோய்எதிர்ப்புசக்தி கொண்டவர்கள் போன்றவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டுமா? என்ற கேள்விகளுக்கு மத்தியில், பூஸ்டர் தேவைப்படலாம் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். அல்லது ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் கூடுதல் தடுப்பூசிகள் அவர்களுக்குத் தேவைப்படுமா? என்பது பற்றி மிக விரைவில் அறிவிப்போம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.