உலக சுகாதார நிறுவனம் கடந்த அக்டோபர் 18 அன்று, இந்திய நிறுவனமான பாரத் பயோடெக்கிடம் மேலதிகத் தகவல்களைத் தருமாறு கேட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து காக்கும் அவசர கால மருந்துகளின் பட்டியலில் கோவாக்ஸின் தடுப்பூசியை இடம்பெறச் செய்ய பாரத் பயோடெக் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவாக, தகவல்களைக் கோரியுள்ள உலக சுகாதார நிறுவனம் இதுபோன்ற முடிவை எடுக்க அவசர கதியிலான முடிவுகளை எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.


கோவாக்ஸின் தடுப்பூசியை அரசு ஆதரவு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் முதல் உலக சுகாதார நிறுவனத்திடம் தகவல்களைப் பகிர்ந்து வருகிறது. இறுதிகட்டப் பரிசோதனைகள் முடிவு பெறாத நிலையில் கோவாக்ஸின் தடுப்பூசி இந்தியாவில் அவசர காலப் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது கோவாக்ஸின் தடுப்பூசியின் மூலம் சுமார் 78 சதவிகிதப் பாதுகாப்பு கிடைக்கிறது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல், கோவாக்ஸின் தடுப்பூசி முறையான தடுப்பூசியாகக் கணக்கில் கொள்ளப்படாது. இதனால் கோவாக்ஸின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வது தடைப்பட்டு நிற்கும் சூழல் உருவாகும். இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகளில் கோவாக்ஸின் சுமார் 11 சதவிகிதம் பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.






`பெருவாரியான மக்கள் உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸின் தடுப்பூசியை அவசர காலத் தடுப்பூசிகளின் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது எங்களுக்குத் தெரிகிறது. எனினும், இதில் அவசர கதியில் முடிவுகளை எடுக்க முடியாது’ என உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. 


`ஒரு தடுப்பூசியை அவசர காலப் பயன்பாட்டுக்கு அறிவுறுத்துவதற்கு முன்பு, அதனை முழுவதுமாகப் பாதுகாப்பானதா, ஆற்றல்மிக்கதா என்பதைப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.



பாரத் பயோடெக் நிறுவனத்திடம் ஒரே ஒரு தகவலை மட்டும் எதிர்பார்ப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் என்னவென்பது குறித்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தரப்பில் எந்தக் கருத்து வெளியிடப்படவில்லை. 


உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சௌமியா சுவாமிநாதன் கடந்த அக்டோபர் 17 அன்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிவுரைக் குழு வரும் அக்டோபர் 26 அன்று கூடுவதாகவும், அவசர காலத் தடுப்பூசிகளின் பட்டியலில் கோவாக்ஸின் மருந்தை இடம்பெறச் செய்வது குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அவர் உலக சுகாதார நிறுவனத்தின் குறிக்கோள் என்பது அவசர காலத் தடுப்பூசிகளின் பட்டியலில் பல்வேறு ஆற்றல்மிக்க மருந்துகளை இடம்பெறச் செய்வதும், அதனை உலகின் பல்வேறு மக்களுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதும் ஆகும் எனவு கூறியுள்ளார்.