உலக நாடுகளில் கொரோனா 4-ம் அலை அதி உச்சமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 1,59,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர்களில் 3,623 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 5,90,611. கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் 1.66 ஆக உள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 151.58 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 155.95 கோடிக்கும் மேற்பட்ட (1,55,95,35,295) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 17.74 கோடிக்கும் மேற்பட்ட (17,74,25,761) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.


இந்தியாவில் கொரோனா தடுப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக 15-18 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குதல் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக 5 மாநில தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில், 52 சதவீதம்பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்தியுள்ளனர்.



உலகின் மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவில் வேக்சின் செலுத்தியவர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதைக் கோவின் தளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் இருந்து ஒருவர் பதிவிறக்கம் மற்றும் பதிவு செய்துக் கொள்ளாலாம். இந்த கொரோனா காலத்தில் எங்குச் சென்றாலும் வேக்சின் சான்றிதழ் கட்டாயம் என்ற நிலையில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வழங்கப்படும் வேக்சின் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் தான் உத்தரப் பிரதேசம். பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களில் அடுத்த சில மாதங்களுக்கு வழங்கப்படும் வேக்சின் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றிருக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகக் கோவின் தளத்திலேயே தேவையான ஃபில்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



வேக்சின் சான்றிதழ்களில் பிரதமரின் புகைப்படம் மறைக்கப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடந்த போதும், எதிர்க்கட்சிகளின் புகார்களைத் தொடர்ந்து இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம் வேக்சின் சான்றிதழில் பிரதமர் படம் இடம் பெற்றுள்ளதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்தே வருகிறது.


கொரோனா தடுப்பு பணிகளில் முற்றிலுமாக தோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடி, தனிப்பட்ட விளம்பரத்திற்காகத் தடுப்பூசி சான்றிதழைப் பயன்படுத்துவதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாகக் கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றம் தொடரப்பட்ட மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரருக்கு ரூ 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, 'நமது பிரதமரைப் பார்த்து ஏன் வெட்கப்படுகிறீர்கள். அரசியல் உள்நோக்கத்துடனும், விளம்பர நோக்கத்துடனும் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.