தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து, தொற்று பரவலை முதலில் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இருப்பினும், கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்புகளும், அதிகரிப்புகளும் அதிகரித்தன.  குறிப்பாக சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மருத்துவ குழு நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிபுணர் குழு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் கடந்த சிலவாரங்களாக தளர்வுகள் அற்ற ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தார். இது, நல்ல பலனை கொடுத்தது. இதனால், 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தொற்று குறையத் தொடங்கின. இதன்காரணமாக கடந்த 7ஆம் தேதியில் இருந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.




இதனைத் தொடர்ந்து, 14ஆம் தேதியில் இருந்து 21 ஆம் தேதி வரை 4 வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து. , கடந்த 19ஆம் தேதி தொற்று பாதிப்பில் அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் வகை 1 எனவும், அரியலூர், கடலூர், சிவகங்கை, தேனி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி போன்ற 27 மாவட்டங்கள் வகை 2 எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் வகை 3 எனவும் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது.


இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை தொடங்குகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.


தமிழ்நாட்டில் நேற்று 6 ஆயிரத்து 596 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,66,628 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,596 ஆக உள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 43 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஏற்கனவே சென்னைக்கு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை அறிவிக்கலாமா, அல்லது தற்போதுள்ள தளர்வுகளை தொடரலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.