தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 7,424 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 7817 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 7500க்கும் குறைவாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24,29,924 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,29,164 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் மட்டும் இன்று கொரோனா வைரசால் 439 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 6,988 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி, கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1343 ஆக அதிகரித்துள்ளது.


இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24,29,924. 14,21,293 நபர்கள் ஆண்கள் ஆவர். பெண்கள் மட்டும் 10,08,593 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 4,267 நபர்கள் ஆவர். பெண்கள் 3,160 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 15,281 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 23,37,209 ஆக உயர்ந்துள்ளது.


தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 189ஆக பதிவாகியுள்ளது. நேற்று 182 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 189 நபர்களாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று உயிரிழந்தவர்களில் 82 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், 107 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 31,386 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் மட்டும் கொரோனா வைரசால் 8071 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 38 பேர் எந்தவித இணை பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி குறைந்து வருவதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு விதிகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்துள்ளது. இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கொரோனா காலகட்டத்தில் அவசிய தேவையாகும் மனநல ஆலோசனைகள்!