கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில் தொற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா தொற்று இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் எப்பொழுதும் போல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று கடந்த ஒரு மாத காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பத்து நபர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மன்னார்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று வரை 52 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதியதாக பத்து நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை கொரோனா தொற்றினால் 62 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மன்னார்குடி அரசு மருத்துவமனை மற்றும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் மேலும் காய்ச்சல் குறித்த அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
 
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு என்று தனி வார்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது இந்த வார்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான அனைத்து மருந்து பொருட்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் மேலும் மூன்று பிரிவுகளாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி கொரோனா தொற்று உள்ளதா என்பது குறித்து சோதனை செய்பவர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.