இந்தியாவின் கொரோனா மூன்றாவது அலை உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதன் தாக்கம் முந்தைய இரண்டு அலைகளை விட குறைவானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்தியாவின் ஐசிஎம்ஆர் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், "Plausibility of a third wave of COVID-19 in India: A mathematical modelling based analysis" என்ற ஆய்வுக் கட்டுரையை நேற்று வெளியிட்டனர்.
கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக கணித மாதிரியியல் மற்றும் கணக்கீட்டு அம்சங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். பலவகையான மக்கள், சார்ஸ்-கோவ்-19 வைரஸின் உருமாறும் தன்மை, உடம்பில் ஏற்படும் நோய்எதிர்ப்பு சக்தியின் ஆயுட்காலம், நோய்த் தடுப்பில் இருந்து தப்பிக்கும் தன்மை, சமூக இடைவெளி மற்றும் பொது முடக்கத்தின் விளைவு உள்ளிட்ட முக்கிய காரணிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொதுவாக, கொரோனா தொற்றினால் நோயுற்றவர் மறைமுகமான நோய் எதிர்ப்பாற்றல் பெறுகிறார். எனவே, தற்போது முதல் இரண்டு அலையில் பெற்ற எதிர்ப்பாற்றல் ஒருவரின் உடலில் நீண்ட காலம் இருந்தால், 3வது அலையின் தீவிரத்தன்மை சற்று குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பாற்றல் ஆயுட்காலம் 4 அல்லது 12 மாதங்கள் என்ற இருவேறு நிலையை முன்வைத்து கணித மாதிரி உருவாக்கப்பட்டது. இருவேறு நிலையிலும் மூன்றாவது அலையின் தீவிரத்தன்மை முந்தைய அலைகளை விட குறைவானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா: தற்போது டெல்டா பிளஸ் போன்ற உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த வகை தொற்று, முந்தைய தொற்றில் இருந்து குணமடைந்தவர்களையும் தாக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது அலையில், இந்தியாவின் உச்சகட்ட பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் மக்கள் தொகையில் 760 என்றளவில் இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.
இந்த வகை கொரோனா தொற்றுகள் மூன்றாவது தீவிர அலையை உருவாக்க வேண்டுமெனில்,முதல் இரண்டு அலையில் நோயுற்று குணமடைந்த 50% சதவிகித மக்களை மீண்டும் தாக்க வேண்டும். மேலும், மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பிக்கும் திறன் குறைந்தது 30 சதவிகிம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று கணிக்கின்றனர்.
பரவும் தன்மை:
புதிய உருமாறிய கொரோனா, முந்தைய கொரோனா வைரஸ்களை விட குறைந்தது 2.5 மடங்கு பரவும் தன்மையை பெற்றிறிந்தாலும், அதன் பாதிப்பு முதல் இரண்டு அலைகளை விட குறைவானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதன் பரவல் (Reprodctive Number - Ro Number) விகிதம் குறைந்தது 4.5 ஆக இருந்தால் மட்டுமே, தீவிர மூன்றாவது அலையை வைரஸால் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் ஆய்வளார்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே, நோயுற்ற பெரும்பாலான மக்கள் மறைமுக நோய் எதிர்ப்பை பெற்றிருப்பதால், 4.5 எண்ணிக்கைக்குக் குறைவான பரவல்திறன் கொண்டா வைரஸால் மூன்றாவது அலையை தன்னிச்சையாக தொடங்க முடியாது.
டெல்டா பிளஸ்: ‘டெல்டா பிளஸ்’ கொரோனாவின் தன்மை பற்றி எதுவும் தெரியாது என்று மத்திய சுகாதாரத் துறை முன்னதாக தெரிவித்தது. மேலும், இந்த மாறுபட்ட கொரோனாவை, எந்த ஆயுதம் கொண்டும் அழிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதை கண்காணித்து, அதன் தன்மையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற தடுப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் அதே விதிமுறைகளும் அடங்கியுள்ளன என்றும் தெரிவித்தது.