தென்னாப்பிரிக்கா நாட்டில் கொரோனா தொற்றின் புதிய ஒமிக்ரான் திரிபு வைரஸ் பாதித்த மக்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் டெல்டா திரிபு வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகளில் இருந்து வேறுபட்டு இருப்பதாக புதிய ஒமிக்ரான் திரிபு வகை குறித்து அரசுக்குத் தகவல் தந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் திரிபு வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளிடம் தலைசுற்றல், தலை வலி, உடல் வலி, தொண்டை எரிச்சல், இருமல் முதலான அறிகுறிகள் தென்பட்டதாக ஏஞ்செலிக் கோட்ஸீ தெரிவித்துள்ளார். இவர் தென்னாப்பிரிக்க மருத்துவ அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். டெல்டா திரிபு வகை ஏற்படுத்தும் பாதிப்புகளோடு ஒப்பிடுகையில், டெல்டா திரிபு இதயத் துடிப்பின் வேகம் அதிகரிப்பது, ஆக்சிஜன் அளவு குறைவது, சுவை, வாசனை ஆகிய திறன்கள் செயல்படாமல் இருப்பது ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
தென்னாப்பிரிக்காவில் தற்போது கொரோனா தொற்றின் மையமாக இருக்கும் ப்ரிடோரியா பகுதியில் பணியாற்றி வந்த ஏஞ்செலிக் கோட்ஸீ, கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததைப் பகிர்ந்துள்ளார். கடந்த நவம்பர் 18க்குப் பிறகு, மீண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தைக் கண்டறிந்த அவர், அந்நாட்டின் கோவிட் தொற்றுக்கான அமைச்சக அறிவுரைக் கவுன்சிலில் இதுகுறித்த தகவலைத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, பரிசோதனை செய்ததில், புதிய வகையாக கொரோனா வைரஸ் திரிபு கண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 29 அன்று நேர்காணல் ஒன்றில் பேசிய ஏஞ்செலிக் கோட்ஸீ, `டெல்டா திரிபு வகையில் இருந்து வேறுபட்ட திரிபு வகை இது என்பதை நோயாளிகளுக்கு ஏற்பட்ட வெவ்வேறு அறிகுறிகளை வைத்து அறிந்தேன். அவை பீட்டா திரிபு வகையாக இருக்கலாம் அல்லது புதிய திரிபு வகையாக இருக்கலாம் என நான் கருதினேன். இது உலகம் முழுவதும் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என நான் எண்னவில்லை. எனினும் இது நோயின் தீவிரத்தை சற்று அதிகரிக்கலாம். தற்போது, இதனை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை நம்மிடையே உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 25 அன்று, தென்னாப்பிரிக்கா புதிய திரிபு வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அறிவித்தது. அண்டை நாடான போட்ஸ்வானா பகுதியில் இந்தத் திரிபு வகை முதலில் தோன்றியதாகவும், அது அருகில் இருந்த ப்ரிடோரியா நகருக்குள் பரவியதாகவும் தென்னாப்பிரிக்கா அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பங்குச் சந்தைகளில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு, தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணத் தடையையும் பல்வேறு நாடுகள் விதிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அரசுக்கு ஆலோசனை கூறும் ஆய்வாளர்கள் தரப்பில், ஒமிக்ரான் திரிபு வகை வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியதாக இருந்தாலும், அறிகுறிகள் லேசாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், நோய்த் தொற்று பெரும்பாலும் இளம் வயதுகொண்டோரிடம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.