தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.  தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 587 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1544 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 1587 ஆக அதிகரித்துள்ளது.

  


தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 27 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 45 ஆயிரத்து 524 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 194 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 194 ஆக அதிகரித்துள்ளது.  கோயம்பத்தூரில் 232 பேரும், ஈரோட்டில் 117 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 







கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,055  ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் ஏதும் இல்லாத  2 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 4 பேரும் உயிரிழந்துள்ளனர். 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8415 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,180 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,594 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,76,112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மாநிலம் முழுவதும் 42781 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 24696 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் 8491 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.