தமிழ்நாட்டில் கொரோனா தொற்று, சில மாதங்களாக பெரிதும் குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 


இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அதிகபட்சமாக சென்னையில் 34 பேரும், செங்கல்பட்டில் 13 பேரும், சேலம் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


கொரோனா தொற்று:


சீனாவில் முதலில் பரவத் தொடங்கியதாக கூறப்படும் கொரோனா, உலகம் முழுவதும் பரவியது. கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.


வரும் ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில், பயிற்சி ஒத்திகை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "இந்த ஒத்திகையில் அரசு மற்றும் தனியார் சுகாதார மையங்கள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒத்திகையில் சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா?  நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா? ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும். இந்தியாவில் முன்னதாக ஏற்பட்ட கொரோனா அலைகள், குறிப்பாக இரண்டாம் கொரோனா அலை, மருத்துவ சுகாதார கட்டமைப்பை உலுக்கி எடுத்தது.


மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். தங்களின் உறவினர்களுக்காக படுக்கைகளை தேடி அலைந்த சம்பவம் எல்லாம் நடந்தது.


முன்னெச்சரிக்கை:


இந்த பயற்சி ஒத்திகையில் நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயுஷ் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனரா ஆகியவையும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. 


ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா என்பது உறுதி செய்யப்படும். ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் கிட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் கோவிட் சோதனை திறன்களை அதிகரிப்பதையும் இந்த பயிற்சி ஒத்திகை நோக்கமாகக் கொண்டுள்ளது.


மீண்டும் அதிகரிப்பு:


இந்நிலையில், பல மாதங்களாக தொற்றுகளின் எண்ணிக்கை பெரிதும் குறைந்து வந்த நிலையில், தமிழ்நாட்டில், இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு தொற்றுக்கு 100-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, மக்கள் மீண்டும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100 எண்ணிக்கை தாண்டியுள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன், அரசு கூறும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும்.