தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 895 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,65,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,895 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 36 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 410 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை 870, ஈரோடு 741, சேலம் 485, திருப்பூர் 434, தஞ்சாவூர் 372, செங்கல்பட்டு 286, நாமக்கல் 274, திருச்சி 231, திருவள்ளூர் 191, கடலூர் 179, திருவண்ணாமலை 178, கிருஷ்ணகிரி 155, நீலகிரி 139, கள்ளக்குறிச்சி 134, மதுரை 125, ராணிப்பேட்டை 116, குமரி 110, நாகை 107, தருமபுரி 104, விழுப்புரம் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,580 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 136 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 58 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 24 பேர் உயிரிழந்தனர். சேலம் 23, கோவை 19, திருப்பூர் 13, திருவள்ளூர் 8, வேலூர் 7, நாகை, நாமக்கல்லில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 41 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 56,886 ஆக உள்ளது.
12 வயதிற்குட்பட்ட 219 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருவது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு வரும் 21-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ மற்றும் நிபுணர்குழுவினருடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தினசரி பாதிப்பு அடிப்படையில் அடுத்தகட்ட தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.