2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று சற்று குறைவாக இருந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸின் திரிபு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனாவின் JN.1 வைரஸ் சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


கொரோனா வைரஸ் அபாயம்:


இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 300 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.


இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து தினசரி நாளிதழ்கள், செய்தி தொலைக்காட்சிகள் மற்றும் பருவ  இதழ்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், முதன்மைச்  செய்தியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள்,  ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


இரட்டை இலக்க பாதிப்பு:


இந்நிலையில் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தமிழ்நாட்டில் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ இந்த கொரோனா தொடங்கியதிலிருந்து அது பல்வேறு வகைகளில் உருமாற்றங்களை தொடர்ச்சியாக பெற்று வருகிறது. சமீப காலமாக, ஒரு ஏழெட்டு மாதங்களாக தமிழ்நாட்டில் ஓர் இலக்கத்தில் அந்த பாதிப்பு இருந்தது. மேலும், RTPCR பரிசோதனைகளின்படியும், அந்த ஓர் இலக்க அளவிலேயே பாதிப்பு இருந்தது.


இப்போது தான் ஈரிலக்க பாதிப்பு 20, 22 என்கின்ற வகையில் வந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் போன்ற இடங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருந்தது. NUS என்று சொல்லப்படுகின்ற (National University of Singapore) நிர்வாகத்தில் இருக்கின்ற நிறைய மருத்துவர்களோடு தொடர்ந்து நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மூன்று நாட்கள் அந்த பாதிப்பு பாசிட்டிவாக இருக்கிறது. நாலாவது நாள் அது நெகட்டிவாக மாறுகிறது என்று சொன்னார்கள்.


இதில் பெரும்பகுதி இருமல், சளி போன்ற மிதமான பாதிப்புகள் தான் இந்த ஒமிக்ரான் என்ற புதிய வகை பாதிப்புகளால் வருகிறது. என்றாலும்கூட, இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தற்போது எங்கெல்லாம் காய்ச்சல் அதிகமாக இருக்கிறதோ, அந்த காய்ச்சல் அதிகமாக இருக்கின்ற இடங்களில் எடுக்கிற மாதிரிகளை எடுத்து RTPCR பரிசோதனைகளை செய்ய சொல்லியிருக்கிறோம். அது போன்று RTPCR பரிசோதனைகள் செய்யப்படும் போது ஒமிக்ரானின் பாதிப்பு என்று இருந்தால், அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட இருக்கிறது.


பொது சுகாதரத்துறையின் சார்பில், கடந்த வாரம் கூட, ஒரு பொதுவான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கர்ப்பிணி தாய்மார்கள், வயது முதிர்ந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணைநோய் உள்ளவர்கள், இவர்களெல்லாம் முககவசம் அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு செல்கிறபோது, நல்லது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அது செய்வது என்பது அவசியமான ஒன்றாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.