கொரோனா மரணங்களை தமிழ்நாடு அரசு மறைக்கவில்லை என்றும், தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள சூழலில், மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனும், கொரோனா குறையாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடனும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட வந்த நிலையில், நேற்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
இந்நிலையில், தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள சூழலில், மக்கள் அலட்சியமாக இருக்காமல், கவனமுடன் செயல்பட வேண்டும் என்று மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தளர்வுகள் தொடர வேண்டும் என்றால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இறைச்சி, மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்புகளை மறைப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று கூறிய மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா மரணங்களை தமிழ்நாடு அரசு மறைக்கவில்லை என்றும், மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் கூறினார். மரணத்திற்கான காரணம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறிய அவர், கொரோனா இறப்பு தொடர்பாக திருத்தம் மேற்கொள்ள முறையான ஆவணங்களுடன் அரசு மருத்துவமனையை அணுகலாம் என்றும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், 25 மாவட்டங்களில் நோய் தொற்ற் குறைந்துள்ளதாகவும், கொரோனா கட்டுப்பாடு மையத்திற்கு அழைப்புகளே வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாட்டில் நேற்று 4 ஆயிரத்து 230 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,810 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,230 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 992 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 238 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 238 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 97 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,818ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்; தமிழ்நாடு அரசு வெளியிட்டது!