இந்தியாவில் சீரம் நிறுவனம் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை துவங்கவுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.


இந்தியாவின் கொரோனா தொற்றின் 2 வது அலை மிகப்பெரிய அளவிலான பாதிப்பினை மக்களுக்கு ஏற்படுத்தியது. இதன் காரணமாக நம் சொந்தங்கள் பலவற்றினை இழக்க நேரிட்டது. இந்நிலையில் தான் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமையும் என இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டது. முதலில் சீரம் நிறுவனத்தில் கோவிஷூல்டு முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.  இருந்தப்போதும் கொரோனா பரவலைக்கட்டுக்கள் கொண்டு வர முடியாமலும், தடுப்பூசி பற்றாக்குறையினால், அவசர காலப்பயன்பாட்டிற்காக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசிக்கு  அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷூல்டு, ஸ்பூட்னிக் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






இந்த சூழலில் தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், கொரோனாவின் புதிய மாறுபாட்டின் காரணமாக மக்கள் மிகப்பெரியப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். ஆல்பா, டெல்டா, கப்பா ஆகிய மாறுபட்ட வைரஸ்கள் உருவாகி வரும் நிலையில் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகளை துரிதப்படுகின்றனர்.  ஏற்கனவே இந்தியாவில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக இதுவரை 5 இந்திய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில், சீரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  மேலும்  இதன் மூலம் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் சுமார் 50 சதவீதம் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  


இந்நிலையில் தான்,  செப்டம்பர் மாதம் முதல்  ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே  ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தினை பகிர்ந்து கொண்டதையடுத்து தற்பொழுது முதல் கட்ட பணிகளில் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் ரஷ்யா நேரடி முதலீட்டு நிறுவனம் கூறியுள்ளது. 






இதனையடுத்து இந்த அறிவிப்புக்குறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதார் பூனாவாலா அவரது கருத்தினைப் பகிர்ந்து உள்ளார். அதில், ஸ்புட்னிக் தடுப்பூசியினை தயாரிக்க ரஷ்யாவுடன் சேருவதில் மிகுந்த மகிழ்ச்சி எனவும், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசிக்கான சோதனைகள் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  அதிக செயல்திறன் மற்றும் பாதுகாப்புகளை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தச் சோதனையின் இறுதியில், வரும் மாதங்களில் மில்லியன் கணக்கில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.






குறிப்பாக கொரோனா, டெல்டா ப்ளஸ் கொரோனா ஆகிய வைரசுகளுடன் 90 சதவீதம் போராடும் வல்லமை கொண்டுள்ளதாக ரஷ்யாவின் ஸ்பூட்னிக் தடுப்பூசி செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர்.  மேலும் இதுவரை ஸ்பூட்னிக் வி தடுப்பூசியினை 67 நாடுகள் பதிவு செய்துள்ளது. மேலும் அர்ஜென்டினா, செர்பியா, பஹ்ரைன், ஹங்கேரி, மெக்ஸிகோ, சான் மரினோ, ஐக்கிய அரபு மற்றும் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி, ஸ்பூட்னிக் வி தடுப்பூசி பாதுகாப்பானதாக மற்றும்  கொரோனா தொற்றிற்கு எதிராக விரைந்து செயல்படுகிறது  எனவும் கூறப்படுகிறது.