சேலம் மாவட்டத்தில் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது. இன்று நடைபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் வாயிலாக 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது‌.



தமிழகம் முழுவதும்  கொரோனா தடுப்பூசி செலுத்த நான்கு  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று 5-வது சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கூறுகையில், இன்று 10 ம் தேதி 1392 மையங்களில் நடைபெற உள்ளதாகவும், இந்த மெகா தடுப்பூசி முகாமின் வாயிலாக 2 லட்சத்து 10 ஆயிரம்  பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் இதுவரை 61 சதவீதம் பேருக்கு  தடுப்பூசி  போடப்பட்டுள்ளது.


மேலும் தடுப்பூசி பணியை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் பணியில் 18,525 பேர் ஈடுபட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்தில் போதுமான அளவு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கையிருப்பில் உள்ளது. உரிய தேதியில் பொதுமக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படும். சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 82 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். சேலம் மாநகராட்சி பகுதியில் 62 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.


சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததற்கு அதிக அளவிலான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளதே காரணம்.
பிற மாவட்டங்களில் உள்ளது போல பரிசுப் பொருட்களை வழங்கியோ, ஒரு பொருளை வாங்குவதற்கு தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டிய நிலை இதுவரை உருவாகவில்லை எனும் அளவிற்கு பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பூசி எடுத்துக் கொள்ள முன் வருகின்றனர். விரைவில் 80% தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இலக்கை எட்ட பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கேட்டுக்கொண்டார்.



முன்னதாக, நேற்று நடைபெற்ற தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கலந்து கொண்டு தடுப்பூசி முகாம் குறித்த தகவல்களை பொது மக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்,  மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை உணர்த்தும் வகையில் அனைவருக்கும் முகக்கவசங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.  இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தடுப்பூசி சேர்த்துக்கொள்வது அவசியம் மற்றும் உயிர் பாதுகாப்பு குறித்து உணர்ந்து தாமாக  தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தினார்.