கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் குறிப்பாக மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என புதுச்சேரி அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலும் தீவிர கட்டுப்பாடுகள்:
கர்நாடக மாநிலத்தில் திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் மற்றும் பார்களில் புத்தாண்டை கொண்டாட முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்விடங்களில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கர்நாடக சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தெரிவிக்கையில், யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை, கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்க வேண்டும்,
தடுப்பூசி மையங்கள் முழுவீச்சில் செயல்பட வேண்டும்,
6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கொரோனா வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்
சீனாவைப்போல், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருமண விழாக்கள், அரசியல் நிகழ்வுகள், சமூகக் கூட்டங்கள் என பொது இடங்களில் மக்கள் தேவையில்லாமல் கூட வேண்டாம் எனவும் சர்வதேச நாடுகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஐஎம்ஏ ( IMA) அறிவுறுத்தியுள்ளது. தற்போது பண்டிகை காலங்களும் நெருங்கி வருவதால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
இதைஅடுத்து, சானிடைசரைக் கொண்டு தொடர்ந்து கைகளைக் கழுவவும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றுவதோடு இல்லாமல், டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இதுதொடர்பாக ஐஎம்ஏ ( IMA) ஆலோசனை நடத்தியது. அப்போது கூறியிருப்பதாவது, தற்போதைய நிலையை பற்றி மக்கள் கவலை அடையத் தேவையில்லை என்றும், தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது அதிகப்படியான அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தாதது என்றும் ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.