கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகநாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தங்களுடைய மக்களுக்கு தடுப்பூசியை போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கோவிஷீல்ட், கோவேக்சின், பைசர், ஜான்சன் அண்டு ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளை அவசர கால ஒப்புதல் வழங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் தற்போது பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் சேர்ந்து தயாரித்த பைசர் தடுப்பூசிக்கு முழு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அமெரிக்க சுகாதார அமைப்பான உணவு மற்றும் மருந்துகள் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசி முதல் முறையாக அவசர கால பயன்பாட்டிற்காக பிரிட்டனில் அனுமதி பெற்றது. அதன்பின்னர் அமெரிக்காவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளிலும் பல்வேறு நபர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 




அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் தரவுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை சேகரித்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் தற்போது வரை 200 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மற்ற நாடுகளில் சேர்த்து ஒரு 100 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த தரவுகளை வைத்து தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி முழு ஒப்புதலை பெற்றுள்ளது. பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் இதுவரை அவசர கால பயன்பாட்டிற்கு கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் தருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 


முழு ஒப்புதல் என்றால் என்ன? அதன் பயன் என்ன?


தற்போது உலகில் அவசர கால ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் பெருந்தொற்று இருக்கும் வரை பயன்படுத்தப்படும். அதற்கு பிறகு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த வேண்டும் என்றால் முழு ஒப்புதலை பெற வேண்டும். மேலும் முழு ஒப்புதலை பெரும் தடுப்பூசி நேரடியாக மக்களிடம் விளம்பரம் செய்யலாம். அத்துடன் இந்த தடுப்பூசியை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கட்டாயமாக்கி செலுத்தலாம். தற்போது வரை கொரோனா தடுப்பூசியை ஊழியர்கள் செலுத்தி கொள்வது கட்டாயமாக்கப்படவில்லை. 


பைசர் தடுப்பூசியின் பாதுகாப்பு சதவிகிதம்?


பைசர் தடுப்பூசி செலுத்திய கொண்டால் கொரோனா பெருந்தொற்று வீரியம் அதிகமாக இல்லாமல் 97% தடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இரண்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு முதல் இரண்டு மாதங்கள் 94% பாதுகாப்பும் அடுத்த 6 மாதங்களுக்கு 84 சதவிகித பாதுகாப்பும் இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. 


பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் எப்போது?


முதல் இரண்டு தடுப்பூசிக்கான முழு ஒப்புதல் ஆணை கிடைத்த பிறகு பைசர் நிறுவனம் தன்னுடைய மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான அவசர கால ஒப்புதலை பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க:கடந்த 24 மணிநேரத்தில் 1603 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் உயிரிழப்பு