நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் அதற்கான தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வைரஸ் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அலை பரவலின்போது செப்டம்பர் மாதத்திலும் இரண்டாம் அலை பரவலின்போது கடந்த மே மாதத்திலும் தொற்று பரவல் விகிதமானது மாவட்டத்தில் தீவிரமாக இருந்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கையால் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ளது.

 


 

தற்போது தருமபுரி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் தினசரி பாதிப்பு 25 நபர்களுக்கு கீழ் இருந்து வருகிறது. நேற்று வரை கொரோனா தொற்றுக்கு மொத்தம் 26,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் 233 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இதுவரை 240 பேர் உயிரிழந்துள்ளதாக நிலையில், தினசரி உயிரிழப்பு என்பது கடந்த ஒரு வாரமாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

 


 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கிராமப் புறங்களில் இருக்கும் மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து கொரோன வைரஸ் தொற்றினை தடுப்பதற்கான தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

 


 

இதனால் தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் அனைவரும், கட்டாயமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மூன்றாவது அலை பாதிப்பிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இன்று முதல் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் முன் களப் பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வணிகர் சங்கங்கள், மருத்துவ பிரதிநிதிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்புசி செலுத்தி கொள்ள முன் வரவேண்டும். கொரோனா தடுப்பு வழி முறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.