இப்போதுதான் டெல்டா வேரியண்ட் சற்று ஓய்ந்திருக்கும் சூழலில் அடுத்ததாக ஓமிக்ரான் (B.1.1.529) என்னும் வேரியன்ட் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கிறது. தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து பல நாடுகளிலும் இந்த வேரியண்ட் பரவி இருக்கிறது. இந்த வேரியண்டை தடுப்பூசிகள் தடுக்காது என மாடர்னா தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பார்மா ஆராய்ச்சி நிறுவனமான ஜிபோ ஆர்என்டி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜ் பிரகாஷிடம் பேசினோம். ஒமைக்ரான் குறித்து விரிவாக பேசினார்.
தற்போது நமக்கு கிடைத்திருப்பது அனைத்துமே ஒரு மாதத்துக்கு முந்தைய டேட்டாதான். முதல் கட்ட தகவலில் இந்த டெல்டா வேரியண்டை விட 32 உருமாற்றங்களை இந்த வைரஸ் சந்தித்திருக்கிறது. அதனால் தடுப்பூசி வேலை செய்யாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. தவிர இதன் பரவும் வேகமும் அதிகமாகவே இருக்கிறது என்பதால் அதிக நபர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இரு விஷயங்களால் நம்மால் தடுக்க முடியும் என முன்பு கூறியிருந்தோம். முதலாவது ஏற்கெனவே கோவிட் வந்தவர்களுக்கு மீண்டும் வராது. அதேபோல தடுப்பூசி செலுத்தி இருந்தால் வராது என்பது ஏற்கெனவே நாம் கூறிவந்தோம். ஆனால் தற்போது உருவாகி இருக்கும் வைரஸ் பல முறை உருமாறி இருப்பதால் நாம் புதிய வைரஸாகவே கருத வேண்டி இருக்கும். அதனால் வேகமாக பரவுகிறது.
இந்த வைரஸில் அதிக நபர்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் இறப்பு விகிதம் மற்றும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்களா என்பது குறித்து தெளிவான டேட்டா இல்லை. இவை ஆரம்ப கட்ட தகவல்கள்தான் இன்னும் சில வாரங்களுக்கு பிறகே குறைந்தபட்சம் இரு வாரங்களுக்கு பிறகே என்ன நடக்கும் என்பது தெரியவரும். இதுபோன்ற வைரஸ்களில் இரு விஷயங்கள் நடக்கலாம். காற்றில் பரவும் அளவுக்கு வேகமாக பரவலாம் அல்லது வேகமாக பரவி வேகமாக முடிவுக்கு வரலாம் என தெரிவித்தார்.
எந்தெந்த நாடுகள்
ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து, பிரிட்டன், ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, பெல்ஜியம், ஸ்விட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இதனை சர்வதேச சமூகத்துக்கு இது பெரிய ரிஸ்க் என்று அறிவித்திருக்கிறது. இதுவரை ஒமைக்ரான் தொடர்பான இறப்புகள் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை இல்லாத அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றும் தெரியவந்திருக்கிறது.
டிசம்பர் 1-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகளை திறக்க மாநில அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது இரு வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
மீண்டும் நெருக்கடிகள், கட்டுப்பாடுகள் வருமா என்பதே இன்னும் சில வாரங்களுக்கு பிறகே தெரியவரும். எச்சரிக்கையாக இருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்