நோய் தொற்றின் மூன்றாவது நிலையாக அறியப்படும் சமூக பரவல் என்னும் நிலையை ஓமைக்ரான் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான மெட்ரோ நகரங்களில் கொரோனா கேஸ்கள் அனாயசமாக உயர்வதாக INSACOG தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஓமைக்ரானுடைய ஒரு துணை மாறுபாடு நாட்டின் கணிசமான பகுதிகளில் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்துவதில்லை, லேசான அறிகுறிகளே தென்படுகின்றன என்று ஆய்வுகள் கூறும் வேலையில், இதுவரை வந்த அலைகளிலேயே அதிக ஐசியு கேஸ்கள் உள்ளது இந்த அலையில்தான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. என்னதான் ஓமைக்ரான் பெரிய பாதிப்புகளை தராது என்று உலக நாடுகள் கூறினாலும் அதன் அச்சுறுத்தல் இன்னும் முதல் அலை போன்றுதான் உள்ளது என்பது நிதர்சனம்.



"ஓமைக்ரான் சமூக பரவலை அடைந்தது, நாட்டின் முக்கிய நகரங்களில் அதன் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது, மற்றும் அதன் துணை வேரியன்ட் ஒன்று எல்லா இடங்களிலும் கணிசமாக உயர்ந்து வருகிறது." என்று INSACOG வெளியிட்டுள்ள புல்லட்டின்கள் தெரிவிக்கின்றன. மேலும், "சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பி.1.640.2 வேரியன்ட் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அது வேகமாக பரவும் என்பதற்கான எந்த அறிகுறியும் இப்போது இல்லை, அதுமட்டுமின்றி குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கே அந்த நோய் வராது என்னும்போது, ​​அது தற்போது கவலைக்குரிய வேரியன்ட்டாக பார்க்கப்படவில்லை. அந்த வேரியண்டில் இதுவரை, இந்தியாவில் எந்த வழக்கும் கண்டறியப்படவில்லை" என்று கூறுகிறது.



இதே INSACOG அறிக்கை ஜனவரி தொடக்கத்தில் சமூக பரவல் வந்ததாக குறிப்பிட்டு, மும்பை மற்றும் டெல்லி அதிக கேஸ்கள் பரவுவதாக அறிவித்திருந்தது. "இந்தியாவில் இனிவரும் ஓமைக்ரான் பரவல் வெளிநாட்டுப் பயணிகள் மூலமாக அல்ல, சமூகத்திற்குள்ளாகவே பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வைரஸ் தொற்று மாறும் சூழ்நிலையை அடுத்து மரபணு கண்காணிப்பு நோக்கங்களை நிவர்த்தி செய்ய INSACOG இன் திருத்தப்பட்ட மாடல் மற்றும் உத்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகள் எல்லா வகையான கொரோனா மாறுபாடுகளுக்கும் ஏற்றது என்று கூறுகின்றது அந்த அறிக்கை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை விட 4,171 குறைவாகும்). இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,92,37,264 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,89,409 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,59,168 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,65,60,650 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.