சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி உலகம் முழுவதும் 2020 மற்றும் நடப்பாண்டில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வைரசால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


டெல்டா, டெல்டா பிளஸ் என்று புதிய புதிய உருவெடுத்து வந்த கொரோனா வைரசின் புதிய வகை கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தென்னாப்பிரிக்கா நாட்டில் பி 1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும், இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்களிலே இந்த வைரஸ்தான் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் வெளிநாட்டவருக்கு பல நாடுகளில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தென்னாப்பிரக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரசால் இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற பயணி மட்டுமின்றி பெல்ஜியம், ஹாங்காங் நாடுகளுக்கு சென்ற பயணிகள் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் கொரோனா வைரசினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவது ஐரோப்பிய நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசியை தீவிரமாக எதிர்க்கும் ஆற்றல் கொண்டது ஆகும். வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த ஒமிக்ரான் வைரஸ், கொரோனா வைரசின் அறிகுறிகளை தீவிரமாக கொண்டதாகும். போட்ஸ்வோனா எனும் நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு கூட இந்த வைரஸ் தாக்கியுள்ளதால் மருத்துவ வல்லுனர்கள் இந்த வைரஸ் மிகுந்த ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் விதித்த கட்டுப்பாடுகள் : 


ஆஸ்திரேலியா: நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் தவிர அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கோவிட்-19 சோதனையின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் போது, ​​72 மணிநேரம் வீட்டில் அல்லது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவதற்கு உத்தரவிட்டுள்ளது.


ஜப்பான்: உலகம் முழுவதிலுமிருந்து வரும் அனைத்து வெளிநாட்டு பார்வையாளர்களும் நுழைவதை நிறுத்தி வைப்பதாக ஜப்பான் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் என பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்தார். 


யுனைடெட் ஸ்டேட்ஸ்: வெள்ளிக்கிழமை, தென்னாப்பிரிக்க நாடுகளில் அமெரிக்கா புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. தென்னாப்பிரிக்கா மற்றும் பிற ஏழு நாடுகளிலிருந்து (போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ, ஈஸ்வதினி, மொசாம்பிக் மற்றும் மலாவி) அமெரிக்காவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என உத்தரவிட்டுள்ளனர். 


சீஷெல்ஸ்: தென்னாப்பிரிக்கர்கள் மற்றும் போட்ஸ்வானா, எஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 4 சனிக்கிழமை முதல் சீஷெல்ஸுக்குள் நுழைய மறுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பங்களாதேஷ்: நவம்பர் 27, சனிக்கிழமையன்று, தென்னாப்பிரிக்காவிற்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து பயணங்களும் வங்காளதேசத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.


சவுதி அரேபியா: தென்னாப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் சவுதி அரேபியாவால் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இலங்கை: தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி உள்ளிட்ட ஆறு தென்னாப்பிரிக்க நாடுகளிலிருந்து பெரும்பாலான பார்வையாளர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.


இஸ்ரேல்: இஸ்ரேல் ஏற்கனவே தென்னாப்பிரிக்கா மற்றும் ஆறு ஆப்பிரிக்க நாடுகளை தனது "சிவப்பு பட்டியலில்" சேர்த்துள்ளது. அந்த நாடுகளில் இருந்து நாட்டிற்கு திரும்பி வரும் இஸ்ரேலியர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது.


இத்தாலி: கடந்த பதினைந்து நாட்களில் தென்னாப்பிரிக்கா, லெசோதோ, போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா அல்லது சுவாசிலாந்தில் இருந்தவர்களுக்கு இத்தாலியில் அதிகாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஜெர்மனி மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளும் பிரிட்டனுடன் இணைந்து ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணத்தை தடை செய்துள்ளன.


தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் பிரான்ஸ் 48 மணி நேரத்திற்கு நிறுத்தி வைத்துள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ராய்ட்டர் தெரிவித்தார்.


சிங்கப்பூர்: ஏழு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சமீபத்திய பயண வரலாற்றைக் கொண்ட சிங்கப்பூரர்கள் அல்லாதவர்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை இல்லாதவர்கள் அனைவரும் சிங்கப்பூர் வழியாக நுழையவோ அல்லது செல்லவோ தடை விதிக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள் தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஈஸ்வதினி, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு பொருந்தும். சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் அந்த நாடுகளில் இருந்து வரும் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று AFP தெரிவித்துள்ளது.