கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை தடுக்க முடியும் என அறிவித்த விஞ்ஞானிகள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கி எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த வைரஸ் தற்போதைய உருமாறிய ஓமைக்ரானாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே டெல்டா வகை வைரசாக உருமாறிய நிலையில் தற்போது அது பிறழ்வு அடைந்த ஒமைக்ரானாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வேரியன்ட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிதாக 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் ஒட்டு மொத்தமாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. அதே போல டெல்லியில் ஓமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. தெலுங்கானாவில் 20 பேருக்கும், கர்நாடகாவில் 19 பேருக்கும், ராஜஸ்தானில் 18 பேருக்கும், கேரளாவில் 15 பேருக்கும், குஜராத்தில் 14 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் இருவருக்கும், தமிழ்நாடு, ஆந்திரா, சண்டிகர், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கும் ஓமைக்ரான் வேரியன்ட் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என உலக நாடுகள் அஞ்சுகின்றன. ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரியது வகை வைரஸ் என பட்டியலிட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளன. அந்நாட்டிற்கு விமானப் போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளை நாம் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை தான் இந்த வைரஸ் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மிக வேகமாக பரவக்கூடியது, வேகமாக பரவும் பட்சத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.