ஒமிக்ரான் பிஏ.2 திரிபு இந்தியாவில் புதிய அலையை ஏற்படுத்துமா என்பது குறித்து ஐஎம்ஏ கோவிட் பணிக்குழு துணைத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஐஎம்ஏ கோவிட் பணிக்குழு துணைத் தலைவரும் மருத்துவருமான ராஜீவ் ஜெயதேவன் பேசியதாவது:
"நாடு முழுவதும் ஒமிக்ரான் பிஏ.2 தொற்று அதிகரித்து வரும் நிலையில், மூன்றாம் அலையைத் தோற்றுவித்தது. அது குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை. பிஏ.2 தொற்று, பிஏ.1 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் தாக்காது. இது புதிய வைரஸோ அல்லது திரிபோ அல்ல.
இது ஒமிக்ரான் வைரஸின் துணை பரம்பரை ஆகும். பிஏ.1, பிஏ.2, பிஏ.3 என 3 வகைமைகள் இதில் மொத்தம் உள்ளன.
எனினும் பிஏ.2 தொற்று பிஏ.1 தொற்றைக் காட்டிலும் அதிவேகத்துடன் பரவும். அந்த வகையில்தான் பிஏ.2 பிறழ்வு நிலையை அடைந்துள்ளது. இதன்மூலம் இன்னும் அதிக மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் வழக்கமாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் தடுப்பூசியால் பெற்ற எதிர்ப்பு சக்தியும் பாதிக்கப்படும்.
வைரஸ் திரிபுகளால் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக மிஞ்ச முடியும். இது ஒமிக்ரான் வைரஸிலேயே தெரிந்துவிட்டது. இந்தப் போக்கு புதுப்புது வைரஸ் திரிபுகளால் வருங்காலத்திலும் தொடரும்.
பிஏ.2 மற்றும் பிஏ.1 வைரஸும் இப்படித்தான் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் பாதிக்கிறது.
இந்த வைரஸ் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும். அடுத்த வைரஸ் வரும்போது அது அலையாக இருக்கும். அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் கடந்த கால வரலாறு, இத்தகைய அலை 6 முதல் 8 மாதங்களுக்குள் ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று சொல்கிறது.
ஆனால் அதுவரை நாம் குறைவான தொற்றுகளைக் கொண்ட ஒமிக்ரான் காலகட்டத்தில் இருக்கும். எனினும் ஒமிக்ரான் வைரஸில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையு மேற்கொள்ள வேண்டும்.
இப்போது வரை ஒமிக்ரான் அறிகுறிகள் பிஏ.2 மற்றும் பிஏ.1 தொற்றுக்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதனால், நோயின் தீவிரத் தன்மையிலும் மாற்றம் இல்லை.
எனினும் ஜப்பானில் மேற்கொண்ட ஆய்வில், பிஏ.2 தொற்றால் நுரையீரல் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிஏ.2 தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் சற்றே அதிகரித்து வருகிறது."
இவ்வாறு ஐஎம்ஏ கோவிட் பணிக்குழு துணைத் தலைவரும் மருத்துவருமான ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்