கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி மட்டும் அங்கே 22056 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் அங்கே ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,27,301 என அதிகரித்துள்ளது.நேற்று மட்டும் 131 பேர் இறந்த நிலையில் அங்கே மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16457 என உள்ளது. 17761 பேர் நேற்று குணமடைந்த நிலையில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,60,804 ஆக உள்ளது.இதுவரை அங்கே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,49,534 என அந்த மாநில அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கே 196902 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.அவற்றில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 11.2 சதவிகிதமாக உள்ளது. அதிகபட்சமாக மல்லபுரத்தில் 3931 பேரும், திருச்சூரில் 3005 பேருக்கும் கோழிக்கோட்டில் 2400 பேருக்கும் எர்ணாகுளத்தில் 2397 பேருக்கும் பாலக்காட்டில் 1649 பேருக்கும் கொல்லத்தில் 1462 பேருக்கும் அலப்புழாவில் 1461 பேருக்கும் கண்ணூரி 1179 பேருக்கும் திருவனந்தபுரத்தில் 1101 பேருக்கும் கோட்டயத்தில் 1067 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளில் 100 சுகாதாரப் பணியாளர்கள் 120 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் 20960 பேரில் 876 பேருக்கு தொற்று எப்படிப் பரவியது என்கிற விவரம் சரிவரத் தெரியவில்லை. தற்போது வரை அங்கே 446211 பேர் மாவட்ட வாரியாக தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 419098 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். மீதம் 27113 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாடு, கர்நாடகாக, மகராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கண்டறியப்படும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. இருப்பினும், 10,௦௦௦க்கும் அதிகமான தினசரி பாதிப்புகளை கேரளா கடந்த ஒரு மாத காலமாக பதிவு செய்து வருகிறது.
இந்த ஏற்றத்திற்கு காரணம் என்ன?
முன்னர் பிரபல வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் இது குறித்து தனது ட்விட்டர் குறிப்பில் பதிவு செய்திருந்தார். அதில் " கொரோனா பரிசோதனை மற்றும் நோய்த் தொற்று கண்டறியப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறைவான இறப்பு விகிதம் இருப்பதால் பெருந்தொற்று அம்மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை வலுவிழக்க செய்யவில்லை என்பதை உணர முடிகிறது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, கேரளாவைப் போல் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
உதாரணமாக, கொரோனா தொற்று பரிசோதனை மூலம் தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 3.5% பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட மாவட்ட அளவிலான சீரோ சர்வே ஆய்வில், மொத்த மக்கள்தொகையில் 23% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, 7ல் 1 என்றளவில் தான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கண்டறியப்படுகிறது. மேலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தடுப்பூசி நிர்வகிப்பதில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில், 45% பயனாளிகளுக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 10%க்கும் அதிகமான பயனாளிக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி டோஸ்களும் போடப்பட்டுள்ளன.