சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 164 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இது, கடந்த 17 நாட்களுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட  அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும்.

  

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த , இரு தினங்களாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 139 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 164 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 

ஜூலை 28 164
ஜூலை 27 139 
ஜூலை 26 122 
ஜூலை 25 126 
ஜூலை 24 127 
ஜூலை 23 130 
ஜூலை 22 133 
ஜூலை 21 138 
ஜூலை 20 141 
ஜூலை 19 147 

கடந்த மே மாதம் 12ம் தேதி 7,564 என்ற தினசரி அதிகபட்ச பாதிப்பைத் தொடர்ந்து, சென்னையில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியது. ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து, கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1000க்கு கீழ் குறைவாக பதிவானது.  மேலும்,  ஜூலை மாத நடுப்பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு சென்னையின் தொற்று பரவல் எண்ணிக்கை மிகக் குறைவானது.

 சென்னையில் கொரோனா முதலாவது அலைக்குப் பிந்தைய உச்சக்கட்ட சரிவு, 2021ம் ஆண்டு பிப்-21ம் தேதி (பாதிப்பு எண்ணிக்கை - 134) ஏற்பட்டது. இரண்டாவது அலையில் மிக மோசமான சரிவு கடந்த ஜூலை 22ம் தேதி பதிவானது (133). அதாவாது, முதல் அலையில் உச்சகட்ட சரிவை அடைய ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், இரண்டாவது அலையில்  மூன்று மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டது.  இந்த  சூழலில், தற்போது இரு தினங்களாக சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும், இந்த போக்கு தொடர்ந்து 10 நாட்கள் நீடிக்கப்பட்டால் மட்டுமே கவலையளிக்க கூடியதாக அமையும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.     


 

சென்னையில், தற்போது நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1474. சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வருபவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை இதுவாகும். தொடர்ந்து இரண்டாவது நாளாக சகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,500க்கும் குறைந்துள்ளது.

இதுவரை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் (527757). இவ்வாறு குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. 


மேலும், சிகிச்சைப் பெற்று வருபவர்களின் 170 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 351 பேர் மருத்துவ ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, தற்போது சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 35% பேர் நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 


பொதுவாக, கொரோனா நோயாளிகளில் 90 சதவீதம் பேர் நுரையீரல் பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியாக முக்கியமான பிரச்னை அல்ல.  10 முதல் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே நிமோனியா எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது நுரையீரலில் உள்ள சிறு காற்று பைகள் வீக்கமடைகின்றன. கொவிட் நோயாளிகளில், சிலருக்கே  மூச்சுத் திணறல் கடுமையான நிலைக்கு செல்லும் போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும்.