கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரபுசங்கர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மொத்த படுக்கை வசதிகள், அதில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எத்தனை, ஆக்சிஜன் செறிவூட்டிகள் மொத்தம் எத்தனை வைக்கப்பட்டுள்ளது , கொரோனா பாதித்தவர்களுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுவரை எத்தனை நபர்கள் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்துள்ளனர், தற்போது எத்தனை நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூடத்தில் ஒரு நாளைக்கு எத்தனை PCR டெஸ்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வசதி உள்ளது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மொத்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்தும், மேலும் கூடுதல் வசதிகள் ஏதேனும் தேவைப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் விரிவாக ஆய்வு செய்தார்.
பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் கவச உடை அணிந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு வழங்கப்படும் உணவு முறையைப் பற்றியும், தேவையான வசதிகள் தங்களுக்கு உரிய நேரத்தில் வருகிறதா என்பது குறித்தும் தங்களுடைய கருத்துக்கள் இருந்தால் கூறலாம் என நோயாளிகளிடம் கூறினார்.
அடிப்படையில் தானும் ஒரு மருத்துவர் என்ற காரணத்தால் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்த நிலையிலும் கவச உடை அணிந்து கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு வசதி தற்போது வரை எவ்வாறு உள்ளது எனவும் மருத்துவ கல்லூரி டீன் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த அதிகாரியிடம் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குனர் சந்தோஷ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா வார்டில் திடீர் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவரின் செயலை சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.